Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக தோல்வி ஆனால்?

ஒரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இணையாகப் பார்க்கப்பட்ட ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் டி.ஆர். எஸ் எனப்படும் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பெருவாரியான இடங்களில் வென்றுள்ளது.
பாஜக தோல்வியடைந்திருந்தாலும் இந்த அளவு வெற்றி பெறுவது தெலங்கானாவில் இதுவே முதன் முறை. பீகார் தேர்தலில் நிதிஷ்குமாரை பலவீனமாக்கி தன்னைப் பலப்படுத்திக் கொண்ட பாஜக ஹைதராபாத் தேர்தலிலும் முஸ்லீம் கட்சியான ஓவைசி கட்சி வாக்குகளைப் பிரித்தால் தான் வெற்றி பெறுவோம் என கணக்குப் போட்டது. காரணம் பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குச் செல்ல வேண்டிய வாக்குகளை ஓவைசியும், நிதிஷ்குமாருக்குச் செல்ல வேண்டிய வாக்குகளை சிராக் பாஸ்வானும் பிரித்ததால் பாஜக பலம் பெற்றது. இதே பாணியில் தெலங்கானாவில் பலம் பொருந்திய கட்சியாக இருக்கும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்குச் செல்ல வேண்டிய வாக்குகளை ஓவைசி பிரிப்பார் நாம் எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்தது பாஜக.
காரணம் தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தைத் தவிற வேறு எந்த மாநிலங்களிலும் காலூன்ற முடியாத நிலை பாஜகவுக்கு இருந்து வருகிறது. இதனால் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வென்றால் அதை வைத்தை தெலங்கானாவில் தாம் பலம் பொருந்திய கட்சி என்ற எண்ணத்தை உருவாக்க நினைத்தது.
தெலங்கானாவில் மத்திய தரவர்க்க படித்த வாக்காளர்களைப் பரவலாகக் கொண்ட மநகராட்சி. மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட இந்த தேர்தலை பாஜக ஒரு சட்டமன்ற தேர்தல் போல எதிர்கொண்டது. தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டதோடு உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜே.பி நட்டா, ஸ்மிருதி இரானி, போன்ற சீனியர் தலைவர்கள் எல்லாம் பல நாட்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்தனர்.

150 வார்டுகளில் மொத்தம் 1,222 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 150 இடங்களிலும், பாஜக 149 இடங்களிலும், காங்கிரஸ் 149 இடங்களிலும், தெலுங்குதேசம் 10 இடங்களிலும், முஸ்லீம் கட்சியான ஓவைசி கட்சி 51 இடங்களிலும் போட்டியிட்டன.
இந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளிவரத்துவங்கியதும் பாஜக ஆதரவு வட இந்திய ஊடகங்கள் பாஜக 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என கூச்சலிடத்துவங்கி விட்டன. உண்மை அதுவல்ல. தபால் வாக்குகளில் பாஜக முன்னணியில் இருந்தது உண்மை. இந்த தபால் வாக்குகள் பீகார் தேர்தலில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதோடு தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குகளிலும் வாக்களிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
ஆனாலும், தேர்தல் முடிவுகளில் டி.ஆர்.எஸ் 57 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக ஓவைசியின் முஸ்லீம் கட்சி 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 22 இடங்கள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 149 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக வென்று விடும் என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்தாலும் அது படு தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் 22 இடங்களில் முதன் முதலாக பாஜக வெல்வது இதுவே முதன் முறை.
காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது. பீகார் தேர்தலிலும் அதிக தொகுதிகளைப் பெற்று தோற்ற காங்கிரஸ் இப்போது தனித்துப் போட்டியிட்டும் தோற்றுள்ளது.

Exit mobile version