ஸ்பெயின் இடதுசாரி அரசியல் கட்சியொன்றின் தலைவரான கஸ்பர் லமாஷரெஸ் இச் சம்பவம் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.ஸ்பெயினின் உள்துறை அமைச்சினூடாக அமெரிக்கத் தூதுவர் மன்னிப்புக் கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய லமாஷெரஸ்,
மன்னிப்புக் கோரல் மட்டும் போதாது. அவமதிப்பான இச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். இது கவலையை மட்டும் ஏற்படுத்தவில்லை. கவலையுடன் சேர்த்து எவ்.பி.ஐ.யின் நடத்தை தொடர்பில் கோபத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பின்லேடனின் தற்போதைய தோற்றத்தை வடிவமைப்பதற்கு எவ்.பி.ஐ.யின் தடயவியல் அதிகாரிகள் கூகுள் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட லமாஷெரஸின் புகைப்படத்தைப் பயன்படுத்தியிருந்தனர்.
அத்துடன் இராஜாங்கத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தேடப்படும் நபர்களின் புகைப்படத் தொகுதியில் வடிவமைக்கப்பட்ட பின்லேடனின் புதிய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.இந்நிலையில், ஸ்பெயின் அரசியல்வாதியான புகைப்படம் பயன்படுத்தப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்ததைத் தொடர்ந்து எவ்.பி.ஐ. இணையத்தளத்திலிருந்து இப் புகைப்படத்தை நீக்கிய போதும் விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களிலுள்ள புலனாய்வுத் துறையினரின் கரங்களில் இப் புகைப்படம் இல்லையென்பதற்கான உத்தரவாதத்தை எவ்.பி.ஐ. வழங்க வேண்டுமெனவும் லமாஷெரஸ் கோரியுள்ளார்.