ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த வருடம் 1.5 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி என்றழைக்கப்படும் பொருளாதாரச் சுரண்டல் காரணமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மாதாந்தப் பணத்தைச் செலுத்த இயலாமையினாலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களில் மின்கட்டணம் 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார்களின் பிடியிலிருக்கும் மின்வழங்கும் நிறுவனங்கள் தமது தொகையை உயர்த்துவதற்கு அரசு எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. அதே வேளை ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 8.5 வீதத்தால் ஸ்பெயினில் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதாக ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் 26 வீதமானவர்கள் வேலையற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.