ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக ரிவிட் செய்த 21 வயதுப் பெண்ணுக்குச் சிறை
இனியொரு...
ஸ்பானியாவில் தடைசெய்யப்பட்ட ஆயுதக் குழுவான கிரப்போ என்ற மாவோயிசக் குழுவிற்கு ஆதரவாக ரிவிட்டர் சமூக வலைத்தளதில் கருத்துக்களைத் தெரிவித்துவந்த கொன்ஸாலேஸ் கமாச்சோ என்ற 21 வயது இளம் பெண்ணுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிரப்போ என்ற கம்யூனிச இயக்கம் 30 வருட கால வரலாற்றைக்கொண்ட்டது. அதன் பல உறுப்பினர்கள் கடந்த 21 வருடங்களாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். கமாச்சோ சிறையிலுள்ள இயக்கத்தின் தலைவரான ‘தோழர் அரெனாஸ்’ என்பவரின் புகைப்படம் உட்பட ஏனைய பல உறுப்பினர்களின் படங்களை ரிவிட்டரில் பதிந்துள்ளார். கம்யூனிச இயக்கத்திற்கு ஆதரவாக பதிவுகளை எழுதிவரும் கமச்சோவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிவிட்டரில் பிந்தொடர்கிறார்கள். கிரப்போ என்ற ‘ஒக்ரோபர் முதலாம் திகதி பாசிச எதிர்ப்புக் குழு’, மீளமைக்கப்பட்ட ஸ்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதக் குழுவாகும். 2003 ஆண்டு இக்கம்யூனிஸ்ட் கட்சி ஸ்பானியாவில் தடை செய்யப்பட்டது.
எழுபதுகளின் இறுதிக் காலங்களில் செல்வாக்கு மிக்க ஆயுதக் குழுவாகத் திகழ்ந்த ‘மீளமைக்கப்பட்ட ஸ்பானியக் கம்யூனிஸ்ட் கட்சி’, ஸ்பானியாவின் பொருளாதார நெருக்கடிகளல் மீட்சி பெறுகிறது எனக் கருதப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும் கூடுகட்டியிருக்கிறது என்றும் சமூக வலைதளங்களுக்குள் ஊடாக சுதந்திரம் பீறிட்டுப் பாய்கிறது என்றும் கூறப்பட்டது. இன்றோ அதே ஜனநாயகமும், சுதந்திரமும் தலைவிரி கோலமாக தெருக்களில் அலைகின்றன. கருத்துக்களைக் கண்டு அஞ்சும் பாசிசம் ஐரோப்பிய நாடுகளில் மீட்சி பெறுகின்றது. பாலியலுக்கும், பல்தேசிய மூலதனக் கொள்ளைக்கும், சமூகத்தைச் சீரழிப்பதற்கும் மட்டுமே ஐரோப்பாவில் சுதந்திரம் உண்டு.