அமரிக்க அரசு உலகின் பயங்கரவாதிகளில் ஒருவரைத் தேடுவது போன்று ஸ்னோடெனைத் தேடிவருகிறது. அவர்
21 நாடுகளில் இதுவரை அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றார். சீனா, இந்தியா, குயூபா, பிரேசில், போலிவியா, நிக்கரகுவா, வெனிசூலா, எக்குவாடோர், இத்தாலி, அயர்லாந்து, நெதர்லாந்து, போலந்து, நோர்வே, ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் இதுவரை அரசியல் தஞ்சம் கோரப்பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து நாடுகளும் ஒன்றில் அமரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்தோ அன்றி, செல்வாக்கிற்கு உட்பட்டோ அரசியல் தஞ்சத்தை முழுமையாகப் பரிசீலிக்கவில்லை. இந்தியா தானாகவே தனது அமரிக்க விசுவாசத்தைக் காட்டி வாலைச் சுருட்டிக்கொண்டது.
தவிர மேலும் ஆறு நாடுகளுக்கு நேற்று ஸ்னோடென் அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை அனுப்பிவைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கின்ற போதும் அமரிக்காவின் மிரட்டல் காரணமாக நாடுகளின் விபரங்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.
இதேவேளை ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா மற்றும் வெனிசுலா அதிபர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர் 10 நாட்களுக்கும் மேலாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தங்கி இருக்கிறார். இதில் நிகரகுவா மற்றும் வெனிசுலா நாடுகள் ஸ்னோடெனுக்கு தஞ்சம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. நிகரகுவாவின் அதிபர் டேனியல் ஒர்டேகா மற்றும் வெனிசுலா அதிபர் நிகொலஸ் மதுரோ ஆகியோர் நேற்று மதியம் தத்தமது நாடுகளில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர்
அமரிக்க அரசும் ஐரோப்பிய நாடுகளும் கணணிகளையும் இணையங்களையும் சட்டவிரோதமாகக் கண்காணிப்பது முன்னரே பலரால் பேசப்பட்டாலும் அவை நேரடியான ஆவணங்களுடன் ஸ்னோடெனால் வெளியிடப்பட்டது. பாலியலை சுதந்திரமாக நுகர்வதற்கான இணையங்களைக் குறைந்தபட்சக் கண்காணிப்பும் இன்றி சுதந்திரமாக உலாவர அனுமதிக்கும் இந்த அரசுகள் தமது சொந்த நாட்டு மக்களையும் தூதரகங்களையும், நாடுகளையும், அரசியல்வாதிகளையும், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களையும் தங்குதடையின்றிக் கண்காணித்து வருகின்றன.
மத அடிப்படைவாதத்தையும், மக்கள் மீதான பயங்கரவாதத்தையும் இவர்கள் கண்காணிப்பதில்லை. மில்லியன் கணக்கில் மக்களிடமிருந்து இணையங்களூடாகக் கொள்ளையடித்துவிட்டு கேமன் தீவுகளிலும், பிரிட்டிஷ் தீவுகளிலும் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துபவர்களை இவர்கள் கண்காணிப்பதில்லை.
இந்த நிலையில் ஸ்னோடெனை ஏற்றுக்கொள்ள இந்த இரு நாடுகளும் முன்வந்ததை விக்கிலீக்ஸ் வரவேற்றுள்ளது.