Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஷிராணி பண்டாரநாயக உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் பொழுது ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை.

நான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 43வது பிரதம நீதியரசராவேன். பிரதம நீதியரசர் என்ற வகையில் நான் நீதியரசர்கள் நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குடிமக்கள் யாவருக்கும் செய்யவேண்டிய கடமையும் தளம்பாத கடப்பாடும் எனக்கு இருக்கின்றது.

அநியாயமான முறையில் அவதூறு செய்யப்பட்டு பழி சுமத்தப்பட்டவராக எதுவித ஏதுக்களும் இன்றி உதறி எறியப்பட்டவளாக நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். கடந்த சில வாரங்களாக என் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடும் நடவடிக்கைக்கு இந்த குடியரசின் ஒரு பிரதம நீதியரசர் மட்டுமல்ல எந்தவொரு குடிமகனும் உள்ளாக்கப்பட்டிருக்ககூடாது. எனது 54 வயது நிரம்பிய வாழ்க்கைக்காலத்தில் 32 வருடகாலத்தில் எனது தாய் நாட்டிற்கு பல்வேறுபட்ட பரிமாணங்களில் பல்தரப்பட்ட நிலைகளில் செய்த சேவைக்கு துரதிஸ்டவசமான முறையில் கிடைத்திருக்கும் அநியாயமான சன்மானம் இது.

பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் எதேச்சதிகாரமாகவும் தன்னிச்சையாகவும் குற்றவாளியாக்கப்பட்டாலும் நான் சட்டரீதியானமுறைகள் மூலம் அதனை முகங்கொடுத்துள்ளேன் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நான் நம்பிக்கை வைத்திருக்கின்ற இயற்கை நீதிக்கோட்பாடு மற்றும் சட்டரீதியான நடவடிக்கை முறைகள் தொடர்பில் நம்பிக்கை கொண்டு ஆரம்பம் முதல் அதனை நிலைநிறுத்தி உயர் நீதிமன்றங்களிலும் உறுதி செய்தேன். கௌரவ சபாநாயகர் அவர்கள் அரசியலமைப்பை வியாக்கியானம் செய்வதற்கு தனிமையானதும் புறநீங்கலானதுமான நியாயாதிக்கம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் கடந்த வியாக்கியானத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அதன் நடவடிக்கை முறைகள் யாவும் சட்டவிரோதமானது எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் உறுதிகேள் எழுத்தாணை மூலம் ரத்துச் செய்யப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டது. ஆகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் எதுவித வலுவோ அதிகாரமோ அற்றதும் சட்டரீதியான நியாயாதிக்கமின்றி மேற்கொள்ளப்பட்டதென்ற அடிப்படையில் செல்லுபடியற்ற ரத்துச் செய்யப்பட்ட தீர்மானமாகும்.

இந்த சூழ்நிலையில் ஓர் ஜனநாயக நாடான எனது நாடு – இலங்கை சட்ட ஆட்சியை திறவுகோளாகக் கொண்டு உரிமைகளை நிலைநிறுத்துகின்ற ஓர் தேசம் அதில் நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர்.

பிரதம நீதியரசர் என்ற பதவி மட்டுமல்ல நீதித்துறையின் சுதந்திரத்திற்கே பங்கம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது சட்ட ஆட்சி இயற்கை நீதி நீதித்துறை சுதந்திரம் என்பன தூக்கியெறிப்பட்டிருக்கின்றன. மட்டுமன்றி காட்டுமிராண்டித்தனமாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.

கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்து நான் சுகந்திரமான நீதித்துறைக்காகவே பாடுபட்டதால் தான் இன்று பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நாட்டின் மக்களே அதியுயர் சக்தி அரசியலமைப்புச்சட்டம் சட்ட ஆட்சியையே அங்கீகரித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிலைநிறுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான அநீதியான முறையில் நான் தண்டிக்கப்பட்டிருக்கமாட்டேன். எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்குப்புறம்பான படுபொய்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் நான் குற்றமற்றவர் மட்டுமன்றி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒரு சிறுதுளி உண்மைகூட இல்லை. மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எதும் உண்மை தென்பட்டிருந்தால் நான் ஒரு கணம் கூட இந்த மகிமைமிகு பிரதம நீதியரசர் பதவியில் நீடித்திருந்திருக்கமாட்டேன். ஒரு குற்றமற்றவர்; என்பதனால் இந்த நாட்டின் பிரதம நீதியரசராகவும் ஒரு பிரஜையாகவும் ஒரு சாதாரண மனிதபிறவியாகவும்இ நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கமுடிகிறது.

நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்திருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்பொழுது தென்படுவதனால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதராணபிரஜைகள் உட்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலும் அலுவலக அறையில்; இருந்து வெளியேறும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்.

இந்த நாட்டின் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு கடந்த பதினாறு வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் கடமையாற்றினேன் நான் எப்பொழுதும் உண்மையாகவும் பயபக்தியுடனும் செயற்பட்டதோடு தனிமனித சுதந்திர வாழ்க்கையை நிலைநிறுத்துவதையும் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் கல்வியை பாதுகாப்பதற்கும் என்சக்திக்கு எட்டியமட்டில் செயற்பட்டுள்ளேன். அவற்றைச் சாதிக்கவே நான் என்றும் பாடுபட்டேன்.

மேலும் உயர்ந்த மகத்தான நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் என்னுடன் நின்ற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப்பொழுது தெரிவித்துக்கொள்கின்றேன் இன்று எனக்கு நீதி கிடைக்காவிட்டாலும் நான்செய்ததையும் நானும் எனது நம்பிக்கையைப் பகிர்ந்தவர்களும் எதற்காகப் பாடுபட்டோமோ அதனைக் காலமும் இயற்கையும் சரியென ஒரு நாள் உணர்த்தும்.

உங்களுக்கு தெரியும் அநேகமானவர்கள் இந்தப்பதவிக்கு வருவார்கள் போவர்கள்; ஆனால் இந்தப் பதவியை தற்போது யார் வகிப்பது என்பது அல்ல முக்கியம் தொடர்ந்தும் நீதித்துறை சுதந்திரம் நிலைநிறுத்தப்படவேண்டியதே முக்கியம்.

நன்றி
கலாநிதி ஷிராணி ஏ. பண்டாரநாயக்கா
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 43வது பிரதம நீதியரசர்
15.01.2013.
மூலம்- Colombo telegraph

Exit mobile version