இன்று அதிகாலை 1.30 மணியளவில் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் செய்திப்பிரிவு தாக்கப்பட்டு முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்படதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்; ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பில் இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல தெரிவித்தார்.
ரியல், சியத்த, மற்றும் வெற்றி அலைவரிசைகளைத் தன்னகத்தே கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக தமது ஊடகப்பணியை செய்து செயற்படுவதுடன், வெற்றி தமிழ்ச் செய்திசேவை பிரிவுவும் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிளவில் குறித்த ஊடக நிறுவனத்தின் செய்திப்பிரிவிற்கு சென்ற இனம்தெரியாத நபர்கள் செய்திப்பிரிவில் காலைநேரச் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செய்தியாளர்களைத் தாக்கி செய்தியறையை முழுமையாகத் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
ஆயுதம் தரித்த 12 காடையர்கள் தமது முகத்தை முழுமையாக மறைத்தப்படி வாயிற்காவலரைத் தாக்கிவிட்டு செய்திப்பிரிவிற்குள் நுழைந்து தமது அட்டகாசத்;தை புரிந்துள்ளனர்.
இதன் போது வெற்றியின் காலை நேரச் செய்திகளுக்காக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செய்தியாளர் லெனின் ராஜ் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த தாக்குதலினால் காயமடைந்த லெனின் ராஜ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று திரும்பியுள்ளதுடன் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.