
கிழக்கில் வெள்ள நிவாரணம் என்ற தலைப்பில் பல புலம் பெயர் தமிழர்கள் நிறுவன ரீதியாக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திரட்டிய பணத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் மின்னஞ்சல்களும் தகவல்களும் பரிமாறப்படுகின்றன. பாதிப்பிற்கு உள்ளான சில பகுதிகளை இனியொரு தொடபுகொண்ட போது உதவிகள் குறித்த தகவல்களை அறிய முடியவில்லை. உள்ளூர் மக்களின் சுய உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டோரின் தகவல்களின் அடிப்படையில் சிறிய அளவிலான ஊள்ளூர் தன்னார்வ நிறுவனங்கள் தவிர, யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் இரண்டு லொறிகளில் உதவிப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவை தவிர கிழக்கில் எந்த உதவி, மற்றும் நிவாரண முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுள் இயங்கும் கே.பியின் தன்னார்வ நிறுவனத்துடன் கூட்டிணைந்து புலிசார் மற்றும் புலியெதிர்ப்பு அணிகள் வெள்ள நிவாரணத்திற்காகப் பெருந்தொகைப் பணத்தைத் திரட்டியுள்ளன. இவர்கள் திரட்டிய பணம் குறித்த முழுமையான, வெளிப்படையான விபரங்கள் மக்கள் முன்வைக்கப்பட வேண்டும். தவிர, யார் ஊடாக யாருக்கு எங்கே பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களும் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசு தன்னுடைய நிகழ்ச்சித் திட்டத்தினுள் எதிர்ப்பு சக்திகளை உள்வாங்கி அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகின்ர வேளையில் திரட்டப்பட்ட பணம் குறித்த முழு விபரங்களையும் முன்வைத்தல் என்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது.