Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெள்ளை லில்லிப் பூக்களைக் கனவு காணுமொரு போர்வீரன் : மஹ்முத் தர்வீஸ்

 

 

 

 

 

 

 

If there are images in this attachment, they will not be displayed.  Download the original attachment
 
வெள்ளை லில்லிப் பூக்களைக்

கனவு காணுமொரு போர்வீரன்

மஹ்முத் தர்வீஸ் 
 

வெள்ளை லில்லிப் பூக்களைக் கனவு காண்கிறான்
இவன்–
மரத்தின் கிளைகள் பற்றி
இலைகள் உதிர்த்து கிளைகளில் பூத்திருக்கிற
ஆலிவ் மரங்களைப் பற்றி

மாலையில் இவன் என்னிடம் சொல்கிறான்

ஒரு பறவையைக் கனவு கண்டது பற்றி
எலுமிச்சை மரம் பூத்தது பற்றி

இவைகளுக்கு அர்த்தம் என்னவாயிருக்குமென
இவன் இவனைக் கேட்டுக் கொள்ளவேயில்லை
இவன் இதன் அர்த்தத்தை நுகர்ந்திருக்க முடியும்
என்பதை இவன் அறிந்தேயிருக்க வேண்டும்
அவைகளின் மீது இவனால் கரம் பதிக்க முடியும்
என்பதைப் பற்றி
இவன் அறிந்து வைத்தேயிருக்க வேண்டும்

‘வீடு’ அவன் சொல்கிறான்

‘எனது அன்னை போடுகிற காப்பியை
உறிஞ்சுகிறேன்
வீடு மாலையில் பத்திரமாகத் திரும்பி
விடுகிறது’

‘அப்புறம் இந்த நாடு பிற்பாடு?’
நான் கேட்டேன்

‘இந்த நாட்டை
நான் அறிவேன்’ அவன் சொன்னான்.

‘எனது மேல் தோலைப் போல இது என்னைப்
போர்த்தியிருக்கவில்லை
கவிஞர்கள் சொல்கிற மாதிரி
எனது இரத்தத்திலும் இது அதிரவில்லை
எனது விழிகளில் பதிந்தவொரு
காட்சி மாதிரிதான் அது’

‘ஒரு வீதியை
ஒரு சில்லரைக் கடையை
ஒரு தினசரிப் பத்திரிக்கையைப் பார்க்கிற மாதிரிதான்
இதை நான் அடையாளம் கண்டேன்’

நான் கேட்டேன் :
‘நீ இதை நேசிக்கிறாயா?’

‘எனது தேசம் பயங்கர சாகசம்
ஒரு கோப்பை மது
ஒரு சந்தோஷ யாத்திரை’
என்றான் அவன்

‘நீ இந்த நாட்டுக்காக
மரணமெய்துவாயா?’

‘மாட்டேன்
நிச்சயம் மாட்டேன்’

‘இந்த இடத்தோடு என்னைப் பிணைத்திருப்பவை
மயிர்க்கூச்செரியும் பேச்சுக்கள்
ஒரு இலட்சியம் –
ஒரு பெரும் போரை, இந்த இலட்சியத்தை
நேசிக்க வேண்டும் என
நான் போதிக்கப்பட்டேன்’

‘இதை நேசிப்பதைப் பற்றி நான்
அறிவேன்
ஒருபோதும் தளிரை_ – வேர்களை
கிளைகளை நான் பிரியமாட்டேன்’

‘சரி இது எதைப் போன்றது?
உனது தேசம்
சூரியன் போன்று உன்னை எரிப்பதா?
அல்லது நின்று உனக்குள்
நிலைத்துச் சுடர்வதா?’

என்னை நோக்கித் திரும்பி அவன்
சொன்னான் :

‘நான் நேசம் செய்வதற்காக
எனது துப்பாக்கியை உபயோகிக்கிறேன்’

‘புராதன இடிபாடுகளுக்கிடையிலான
திருவிழாக்களின் ஸப்தம்
எனது காதலியரின் எதிரொலி
பழைய, மிகப் பழைய சிலையொன்றின்
மௌனம்
அதன் காலம் இடம் நிலைப்பாடெல்லாம்
மறந்து போயிற்று’

அதன் பின்னர் அவன் அவனது
விடுபடுதல் பற்றி
பயண விநாடிகள் பற்றிப் பேசினான் :

அவன் அம்மா அழுததைப் பற்றி
அவை எவ்வாறு அவனை முன்னணி வீரனாய்
கொண்டு சேர்த்தது என்பது பற்றி
அவனது தாயின் துயரம் எவ்வாறாய் அவன்
நாடி நரம்பில் எரிந்தது என்பதைப் பற்றி
அதற்குமுன் எப்போதுமில்லாதவொரு
ஆசையொன்றெழுந்தது பற்றி

பாதுகாப்பு அமைச்சர்
அப்போது மயில்களை முன் வாசல் கேட்டுகளில்
வளர்த்திருக்கலாம்
அவைகள் இப்போது பெரிய மயில்களாக
வளர்ந்துமிருக்கலாம்

ஒரு சிகரெட்டை அவன் பற்ற வைத்தான்
பிறகவன் சொன்னான் :

இரத்தக் குளங்களின் இடையில்
பாதை தேர்ந்த ஒருத்தனைப் போல
அவன் பேசினான்

‘நான் ஆலீவ் மரக்கிளையைக் கனவு
கண்டு கொண்டிருந்தேன்
எலுமிச்சை மரத்தின் கிளைகளில்
காலை நேரத்தை இதயத்திற்குள் கொண்டு போகும்
பறவை பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தேன்’

‘உனது கண்களுக்கு முன்னால்
நீ எதைப் பார்த்தாய்?’

‘நான் எதைச் செய்தேனா
அதனைப் பார்த்தேன்’

‘இரத்தநிற லில்லிப் பழங்களைப் பார்த்தேன்
மணலில் தகர்ந்து நொறுங்கி
கொடுரமாக சிதறிக் கிடந்த இரத்தநிற
லில்லிப் பூக்களைப் பார்த்தேன்!’

‘மார்பகங்களில்
அடிவயிறுகளில்’

‘நீ எத்தனை பேரைக் கொன்றிருப்பாய்?’

‘உன்னால் எவ்வாறு கணக்கிடமுடியாதோ
அவ்வாறே என்னாலும்
கணக்கிட்டுச் சொல்ல இயலாது
ஆனால் நானொரு தங்கப்பதக்கம் பெற்றேன்’

எனது காயத்தின் மீது கத்தியை
மறுபடி நான் திருப்பினேன்
நான் கேட்டேன் :

‘அவர்களில் ஒரேயொருவனைப் பற்றியேனும்
சொல்லேன்’

அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்

புஜத்தில் இருக்கிற தினசரிப் பத்திரிக்கையை எடுத்து
பிடில் வாசிப்பவன் போல் விரித்தபடி
ஒரு பாடலை அபிநயிப்பவன் போலப் பேசினான் :

‘தெறித்த நட்சத்திரங்களைத் தடுக்கிற மாதிரி
நிலைகுலைந்த ஒரு கூடாரம் போல
சிதறிய கற்களின் மீதவன் விழுந்தான்’

‘அவனது புருவம் விரிந்து
இரத்தம் உறைந்து மகுடமிட்டிருந்தது’

‘அவன் நல்ல சண்டைக்காரன் இல்லை
ஒரு தொழிலாளி
ஒரு விவசாயி
இதைப் போல ஏதோவொன்றாக இருப்பவன் அவன்
நிலைகுலைந்த கூடாரம் போல
கற்களின் மீது சிதறிப்பரவினான் அவன்’

‘செத்துப் போனான்
வறண்டு போன இரண்டு நதிகள் மாதிரி
கைகளை பரத்திப் போட்டு அவன்
செத்துப் போனான்’

‘அவன் பாக்கெட்டை நான் துளாவியபோது
அவன் யாரென நான் அறிந்தேன்
இரண்டு போட்டோக்கள் அதிலிருந்தன
ஒன்று அவன் மனைவியுடையது
பிறதொன்று
அவனது சின்னஞ்சிறு பெண் குழந்தையினுடையது’

‘அதற்காக நீ வருத்தப்பட்டாயா?’

அவன் என்னை இடைமறித்துச் சொன்னான் :

‘மஹமத், என் நண்பனே’

‘துயரம் ஒரு மங்கிய வெள்ளைப்பறவை
எந்தப் போர்க்களத்திலும்
அதை நீ பார்க்க முடியாது’

‘ஒரு போர் வீரனுக்கு
துயரமும் கொடூரமும் ஒன்றுதான்
போர்க்களத்தில் நான் நெருப்பையும் அழிவையும்
சிதறும் ஒரு இயந்திரம்’

‘ஒரே பறவை அங்கு
நான் கறுப்பாக்கும் காற்றுதான்’

அதன்பின்பு அவன்
ஒரு பெண்ணைப்பற்றி
அவனின் முதல் பெண்ணைப்பற்றி
இங்கிருந்து வெகுதூரத்திலிருக்கும்
தெருக்களைப் பற்றி
போரில் அவைகளின் அர்த்தம் பற்றி
வானொலியின் சாகசம் பற்றி
பத்திரிக்கைகளின் யுத்தஜாலம் பற்றியெல்லாம்
பேசினான்..

இருமலை கைக்குட்டைக்குள் அவன் மறைக்க
முயற்சித்துக் கொண்டிருப்பதை
நான் பார்த்தேன்

பிற்பாடு கேட்டேன் :

‘நாம் மறுபடி சந்திக்க முடியுமா?’

‘இங்கிருந்து வெகு தொலைவிலிருக்கிற
ஏதோவொரு நகரத்தில் சந்திக்கலாம்’

அவன் சொன்னான்.

ஆகவே நான் நான்காவது முறையாக
அவன் கோப்பையை நிரப்பினேன்

நகைச்சுவையோடு நான் சொன்னேன் :

‘நீ விடை பெறுகிறாய்?
நிச்சயமாக இல்லை.
அப்புறம் உனது தாய் நாடு என்ன ஆவது?’

அவன் கத்தினான்

‘என்னைத் தனியே இருக்க விடு’
அவன் சொன்னான்

‘நான் வெள்ளை லில்லிப் பூக்களைக்
கனவு காண்கிறேன்
பாடும் தெருக்களை
வெளிச்சம் நிறைந்த வீட்டை வேண்டுகிறேன்
துப்பாக்கியினுள்ளிருக்கும்
கொடுரமான, கனத்த இதயத்தை அல்ல
நல்ல இதயத்தை நான் வேண்டுகிறேன்.
பாஸிஸ்ட் அந்தகார இருட்டை அல்ல
சூரியப்பிரகாச நாளை நான் வேண்டுகிறேன்.’

‘பகல் வெளிச்சத்தில் புன்னகைக்குமொரு
குழந்தையை வேண்டுகிறேன்
போர் இயந்திரத்தின் ஏதோவொரு
இயந்திர நுட்பத்தைத் தெரிந்து கொள்ளவும்
நான் வேண்டேன்’

‘நான் இந்தப் பூமித்தாயிடம் வந்தது
சூரிய வெளிச்சத்தை உணரவும்
வைகறையாய் விரியவும்தான்
அஸ்தமிக்க அல்ல’

‘நான் சாவதற்கு மறுக்கிறேன்’

‘பெண்களின் மீதும்
குழந்தைகளின் மீதும் போர் தொடுப்பதற்கு
நான் மறுக்கிறேன்’

‘ஆயுதத் தொழிற் சாலைகளின்
எண்ணைக் கம்பெனிகளின்
பணம் கொழுக்கும் பைசாசங்களைப் பாதுகாப்பதற்காக
பணமுதலைகளின்
பேய்களின் எண்ணைக் கிணறுகளையும்
திராட்சைத் தோட்டங்களையும் பாதுகாப்பதற்காக
நான் சாக மாட்டேன்.’

அதன் பின்னவன் எனக்கு
விடை கொடுத்தான்
ஏனெனில்
அவன் வெள்ளை லில்லிப் பூக்களுக்காகக்
காத்திருந்தான்

ஆலிவ் மரத்தின் கிளைகளில் அதன்
இதயத்துக்குள்
அதிகாலையைக் கொண்டு போகும்
பறவைக்காக அவன் காத்திருந்தான்

இவைகளைப் ஸ்பரிசிக்க வேண்டுமென்றும்
இவைகளின் மீது கரம் பதிக்க வேண்டுமென்றும்
தனக்குப் புரிந்திருக்க வேண்டும் என்பதை
அவன் அறிந்தேயிருந்தான்.

அவன் அறிந்து கொண்டான்

அவன் சொன்னான் :

‘அம்மா காப்பி போட்டுக் கொடுக்க வீடு
காப்பி அருந்த
பத்திரமாக மாலை வீடு திரும்ப வேண்டும்.’

வெள்ளைப்பூக்களுக்கு
இவன் கனவு காண்கிறான்
ஆலிவ் மரத்தின் பூத்த கிளைகளுக்கு
இவன் கனவு காண்கிறான்

இலைகள் துளிர்க்கவும்
மாலையில் பறவைக்காகவும்
எலுமிச்சை மரத்தின் பூப்புக்காகவும் இவன்
கனவு காண்கிறான்

இவைகளின் அர்த்தம் என்னவாயிருக்குமென
இதுவரை அவன் தன்னைக்
கேட்டுக் கொள்ளவேயில்லை

அவைகளை அவன் ஸ்பரிசிக்க வேண்டும்
கரங்களால் தொட வேண்டும் என்பதை
அவன் அறிந்தேயிருந்திருக்க வேண்டும்

‘வீடு’ அவன் சொன்னான் :

‘அம்மா தரும் காப்பியை உறிஞ்சும்
வீடு
மாலையில் பத்திரமாகத் திரும்பும் வீடு’

‘அப்புறம் இந்த நாடு’ நான் கேட்டேன்

‘நானிந்த நாட்டை அறியேன்’
அவன் சொன்னான்

‘எனது மேல்தோலைப் போலப் போர்வையாக
இதனை நான் மூடியிருக்கவில்லை.’

———————————————————–
தமிழில் : யமுன ராஜேந்திரன்

Exit mobile version