கடந்த ஒக்டோபர் மாதமே அவருக்கு விருது வழங்கப்படும் செய்தி வெளியிடப்பட்ட போதும் இரண்டொரு நாட்களுக்கு முன் தான் அந்த விருது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டிருந்து.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் சமாதானத்தின் பேரிலான விருது இராணுவத்தின் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பது தான். அதிலும் முன்னைய காலங்களை விட மஹிந்த ஹத்துருசிங்க கட்டளைத் தளபதியாக பதவியேற்ற பின் தான் யாழ்ப்பாணத்தில் மீண்டும் வன்முறைகள் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன.
யாழ். அளவெட்டி கோயிலில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தவர் சுடப்பட்டது தொடக்கம் அண்மையில் இரண்டு பூசகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது வரை மட்டுமன்றி யாழ். பொது நூல் நியைலத்தில் நடந்த வன்முறைகள் தொடக்கம் “நாம் இலங்கையர்” அமைப்பின் சார்பில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கவனயீர்ப்புப் பேரணி நடாத்தச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தாக்கப்பட்டது வரை அனைத்து வன்முறை சார் நிகழ்வுகளும் அவர் கட்டளைத் தளபதியாக வந்த பின்பே நடந்தேறியுள்ளன.
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் எந்தப் பங்களிப்பும் வழங்கவில்லை என்பது தெளிவாகின்றது.
மறுபுறத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளைத் தோற்கடித்து இலங்கையில் சமாதானத்தை நிலைநிறுத்துவதில் அவர் பங்களித்தார் என்றும் கூற முடியாது. ஏனெனில் இறுதி யுத்தகாலத்தில் அவர் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகமொன்றில் இராணுவக் கற்கைநெறியொன்றை மேற்கொண்டிருந்தார்.
இவை எல்லாவற்றையும் விட பெரும் வேடிக்கை என்னவென்றால் இன்று இலங்கையில் காணாமல் போயிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் காணாமல் போனதில் இதே மஹிந்த ஹத்துருசிங்கவுக்குப் பெரும் பங்குண்டு.
இலங்கையின் வெள்ளை வான் கடத்தல்களின் ஆரம்ப சூத்திரதாரி அவர் தான். சரத் பொன்சேக்கா இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் நடந்த வெள்ளை வான் கடத்தல்களின் பின்னணியில் இருந்து அதனை மேற்கொண்டவர் இந்த மஹிந்த ஹத்துருசிங்க தான்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க குறைந்த பட்சம் மஹிந்த ஹத்துருசிங்க போரை எதிர்த்து ஒரு வார்த்தை தானும் பேசியதில்லை. ஒரு இராணுவ அதிகாரிக்கு சமாதானத்தின் விருது வழங்கப்படுவதாயின் குறைந்த பட்சம் அவர் யுத்தத்தில் ஈடுபடுவதை எதிர்த்தவராகவும், அதன் கெடுதிகள் பற்றி விமர்சித்தவராகவும் இருக்க வேண்டும்.
அப்படியல்லாது தற்போதைக்கு இராணுவ சேவையில் நீடித்திருக்கும் ஒருவருக்கு அவ்விருது வழங்கப்படுவதானது அதன் நோக்கத்தையே சிதைத்து விடுகின்றது
இப்படியான விடயங்களை நோக்கும் போது சமாதானத்திற்கான எந்தப் பங்களிப்புமே வழங்காத அவருக்கு சமாதானத்திற்கான விருது வழங்கப்பட்டிருப்பதானது உலக மகா நகைச்சுவை என்றால் அது மிகையல்ல.
இவ்வாறாக தரம் மற்றும் தகுதி பார்க்காது வழங்கப்படும் விருதுகளால் அந்த விருதுகளின் மதிப்பு தரம் தாழ்ந்து போவது மட்டும் நிஜம். அதனை சம்பந்தப்பட்டவர்கள் தான் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரம் மற்றும் செல்வாக்கைக் கொண்டு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உலகில் இதெல்லாம் சாத்தியப்படுவதாக தெரியவில்லை.