மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2010 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானது.
மனுவின் எதிரியான சரத்பொன்சேகாவின் மீது மக்களிடையே குழப்பம் விளைவித்து மக்களை அச்சுறுத்தியமை, இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் , அரசாங்கத்திற்கு எதிராக வார்த்தையளவில் விரோதம் செய்தமை என்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வழக்கின் முதலாவது சாட்சியாக சண்டே லீடர் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் பெற்றிகா ஜான்ஸ் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , 58 ஆவது படையணியின் கட்டளையிடும் தளபதியாக கடமையாற்ற பிரகேடியர் சவேந்திர சில்வா, ஐ.நாவின் மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் சேனுக்க செனவிரத்ன, இலத்திரனியல் ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என 25 பேர் சாட்சியமளித்தனர்.