பொதுத்துறை வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது. பொதுத்துறை வருமானத்திலிருந்தே ஒய்வூதியம், வேலையற்றோருக்கான கொடுப்பனவு போன்றவை வழங்கப்படுகின்றன. வெளி நாட்டவர்கள் பொதுவாக உடலுழைப்புடன் தொடர்பான கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
தவிர சேவைத்துறை சார்ந்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் வெளிநாட்டுக் குடியேறிகளையே நம்பியிருக்கின்றன. பிரித்தானியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் ஊதியம் ஆகியன இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. டெஸ்கோ போன்ற பல்பொருள் அங்காடிகளில் அடிப்படை ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 16 மணித்தியால நிரந்தர வேலை நேரம் மட்டுமே வழங்கப்படுகின்றது. 40 மணித்தியாலம் வரை வேலைசெய்யும் இத் தொழிலாலர்களின் 16 மணி நேரத்திற்கு மேற்பட்ட வேலை நேரம் மேலதிக வேலை(over time) நேரமாகக் கணிப்பிடப்படுகிறது. சட்டப்படி 16 மணித்தியாலத்திற்குரிய விடுமுறை மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை மட்டுமே இப் பல்பொருள் அங்காடிகள் வழங்கும். எஞ்சிய நேரம் தற்காலிகமானதாகக் கருதப்படுவதால் அந்த நேரத்திற்குரிய உரிமைகள் வழங்கப்படுவதில்லை.
வெளி நாட்டவர்கள் புலம்பெயர்ந்ததும் வங்கிக்கடன், கடனட்டை போன்ற நிதிச் சிறையில் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். இச் சிறையிலிருந்து மீள்வதற்காக வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வெளி நாட்டுக் குடியேறிகள் பல்தேசிய வியாபார நிறுவனங்களைப் பொறுத்தவரை பெரும் இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும் மலிவான கூலிகள். இதனால் பொருளாதா வளர்ச்சி என்று அரசுகள் அறிவிக்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஆக, எதிர்ப்புக்கள் எழாத சுரண்டலுக்கு உட்படுத்துவதற்கு வெளி நாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள்.
உரிமைகளைக் கோராமல் வெளி நாட்டவர்கள் வேலை செய்வதால் பிரித்தானியாவின் வெள்ளையினத் தொழிலாளர்கள் வேலையின்மைக்கு உள்ளாகின்றனர். இவர்கள் வெளி நாட்டவர்களே தங்களது வேலையைப் பறித்துக்கொண்டவர்கள் என்று எண்ணுகிறார்கள். இதனால் நிறவாதம் அதிகரிக்கிறது. இந்த நிறவாதத்தை அரசுகள் உள்வாங்கி வெளி நாட்டுத் தொழிலாளரக்ளை அச்சம் நிறைந்த சூழலுக்குள் வைத்திருக்கின்றன.
வெளிநாட்டுக் குடியேறிகளின் அளவை ஆளும் கட்சியின் திட்டத்திற்கு அமையக் குறைத்தால் 2060 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60 வீதத்தால் குறைவடையும் என்று அறிக்கை கூறுகிறது.
National Institute of Economic and Social Research (NIESR) என்ற அமைப்பே இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.