இலங்கையில் இரண்டு பேரினவாதக் கட்சிகளும் இனப்படுகொலையில் யார் முன்னணியில் திகழ்ந்தார்கள் என்று பெருமையடித்துக்கொள்வதைப் போல பிரித்தானியா போன்ற நாடுகளில் யார் அகதிகளையும் வெளி நாட்டுக் குடியேறிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்று பெருமையடித்துக்கொள்வார்கள்.
இதனூடாக மக்களின் சிந்தனையில் நிறவாத மற்றும் தேசிய வெறியைத் தோற்றுவித்து அதனைத் தேர்தலில் தமது வாக்குகளாக மாற்றிக்கொள்வார்கள்.
அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் அதீத தேசிய வெறி என்பதற்கு இலங்கையைப் போன்றே பிரித்தானியாவும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.
பிரித்தானியாவில் அடுத்தவருடம் மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால், அகதிகள் மற்றும் வெளிநாட்டுக் குடியேறிகள் மீதான உளவியல் தாக்குதலை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது.
ஆளும் அரசாங்கமான பழமைவாதக் கட்சி (Conservative) வழமையாகவே அகதிகளுக்கும் வெளி நாட்டுக் குடியேறிகளுக்கும் எதிரான தாக்குதலில் முக்கிய பாத்திரம் வகிப்பதுண்டு. ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி (UKIP) போன்றவை பழமைவாதக் கட்சியின் இப்பிரச்சாரங்களை உள்வாங்கிப் பயன்படுத்தி வருகின்றன. UKIP ஒருபடி மேலே சென்று நிறவாதத்தையும், குடியேற்ற வாசிகளுக்கும் எதிரான கலவையாக மக்களை நச்சூட்டி வருகின்றனர்.
பொதுவாக புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிரான கருத்தியல் ரீதியாகப் பிரச்சாரம் மேற்கொள்ளாத லிபலர் டெமோகிரட் மற்றும் தொழிற் கட்சி போன்றனவும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன.
பிரித்தானியா முழுவதும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையே அடிப்படையானதாக உள்ள நிலையில் அதற்கான வேலைத்திட்டம் எந்தக் கட்சிகளிடமும் இல்லை. அதன் காரணமாக தேர்தலில் வெளி நாட்டவர்களுக்கு எதிரான பிரச்சாரமே முன்னிலை வகிக்கிறது.
டேவிட் கமரனின் பழமைவாதக் கட்சி பிரித்தானியாவிற்குள் நுளையும் ஒவ்வொரு வெளி நாட்டவரையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இதனைக் கண்டித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜோன் குளோட் ஜன்கர், பிரித்தானியா ஐரோப்பியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று குற்றம் சுமத்தினார். இவரைப் பொறுத்தவரை ஐரோப்பா தவிர்ந்த பிரதேசங்களிலிரிந்து பிரித்தானியாவிற்குள் நுளைபவர்கள் மனிதர்களே அல்ல என்ற தொனியில் பேசியிருக்கிறார்.
பல்தேசிய வியாபார நிறுவனங்கள் பிரித்தானியாவைக் கொள்ளையடித்துச் செல்ல அப்பாவித் தொழிலாளர்கள் மீது அரசியல் கட்சிகள் உளவியல் யுத்தம் ஒன்றையே கட்டவிழ்த்து விட்டுள்ளன.