Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெலிவேரிய கொலைகள் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : சுமந்திரன்

Sumanthiranஅரசாங்கத்திற்கு எதிராக எவரும் கிளர்ந்தெழுந்தால் வெலிவேரியவில் இடம்பெற்றதே அவர்களுக்கும் நடக்கும் என்பதை வெளிப்படுத்தவே இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய சம்பவத்தில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் மேலும் சிலர் பலியாகியும், காயங்களுக்கு உள்ளாகியும் இருக்கலாம். இதனை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் உள்ளது.
குடிநீர் கேட்டுப் போராடிய அப்பாவிப் பொதுமக்களுக்கு அரசாங்கம் துப்பாக்கி முனையால் பதில் கொடுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தை கலைக்க உயிர்களை காவுகொள்வதற்கான எவ்வித அவசியமும் இல்லை. இது வேண்டும் என்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவரும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியாது. அவ்வாறு எவரும் செயற்பட்டால் அவர்களுக்கு வெலிவேரியவில் இடம்பெற்றதே கிடைக்கும் என்பதை வெளிப்படையாக புரியவைக்கவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நாட்டில் அன்று அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது. அதனையடுத்து முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது இது சிங்கள மக்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. எமது நாட்டிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயர் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வன்னியில் மக்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட போதும், வெலிவெரியவில் அப்பாவிகள் கொல்லப்பட்ட போதும் மக்களையும் உலகில் போராடுகின்றவர்களையும் கண்டுகொள்ளாத சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் கொலைகளின் பின்னணியில் செயற்படும் அன்னியர்களிடமே முறையிடுகிறார்கள். சர்வதேச விசாரணை என்று நான்குவருடங்களைத் தொலைத்துவிட்டு மக்களிடம் வாக்குப் பொறுக்கத் தயாராகிவிட்டார்கள்.
எது எவ்வாறாயினும் சுமந்திரனின் கருத்துக்களில் பொதிந்துள்ள உண்மையை மறுக்கமுடியாது.

Exit mobile version