Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெறும் அறிக்கைகளை விட்டால் அனைத்தும் தீர்ந்துவிடும் என நினைக்கின்றனர்:டக்ளஸ்.

 

வன்னியில் எமது உறவுகள் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்ட போதும் அம்மக்கள் இடம்பெயர்ந்து வந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களது அவலங்கள் குறித்தோ தேவைகள் குறித்தோ அக்கறை கொள்ளாமல் வெளிநாடுகளில் தங்களது குடும்பங்களை குடியேற்றி விட்டு நாடு நாடாக சுற்றித் திரிந்தவர்கள் இங்கே தேர்தல் ஒன்று நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் மீண்டும் வந்து மக்களை ஏமாற்றும் வித்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் ஒருசிலர் வெறும் அறிக்கைகளை விட்டால் மட்டும் எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என நினைத்து எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் அன்று முதல் இன்றுவரை எமது மக்களின் தேவைகளை உணர்ந்து அம்மக்கள் மத்தியில் நிலைத்து நின்று செயற்பட்டு வருகின்றோம்  என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகங்களில் வறிய குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மூலப்பொருட்களை வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் யாழ். மாநகர சபைத் தேர்தலை நாம் சர்வ சாதாரணமாகக் கருதக் கூடாது. எமது நாளாந்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் அனைத்துக்குமான தீர்வை எட்டுவதற்குரிய ஆரம்ப நுழைவாயிலாகவே நாமிந்த தேர்தலை கருத வேண்டும்.

 நாம் எவருக்கும் அடிபணிந்து வாழ வேண்டிய தேவை இல்லை. அதேநேரம் எமது தனித்துவங்களை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவும் கூடாது. எவ்வகைத் தேவையாக இருப்பினும் அவற்றை உரிமையுடன் கேட்கும் உரிமை எமது மக்களுக்கு உண்டு என்பதை எமது மக்கள் உணர்ந்து துணிந்து செயற்பட முன்வர வேண்டும் என  தெரிவித்தார்.

Exit mobile version