Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வீட்டுவாசலில் இரத்தத்தைக் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்! _

உடலிலிருந்து ஊசியால் இரத்தத்தை எடுத்து, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று தாய்லாந்து பிரதமரின் வீட்டின் முன் கொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போதைய பிரதமர் பதவி விலக வேண்டும் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று பாங்கொக்கில் நடைபெற்றது.

தாய்லாந்து நாட்டில் தற்போது குடியரசுக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சியின் சார்பில் அபிசிட் வெஜாஜிவாஸ் பிரதமராக உள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவட்ராவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவப்பு சட்டை மற்றும் செங்கொடிகளை ஏந்தியபடி பாங்கொக்கில் உள்ள பாராளுமன்றம் முன்பு இவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் வெஜாஜிவாஸ் பதவி விலக வேண்டும், தற்போதுள்ள பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத் து வந்தனர். ஆனால் அரசு இவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்கவில்லை.

எனவே, தங்கள் உடலில் இருந்து ஊசி மூலம் இரத்தத்தை எடுத்து அதைப் பிரதமரின் வீட்டின் முன்பு கொட்டி போராட்டம் நடத்துவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உடலில் இருந்து இரத்தத்தைப் போத்தல்களில் எடுத்தனர். அவற்றை ஊர்வலமாக பாங்கொக்கில் உள்ள பிரதமர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது வீட்டைச் சுற்றிப் பொலிசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை நெருங்க விடாதபடி பாதுகாப்பு அரண் போன்று துப்பாக்கியுடன் நின்றனர்.

இருந்தும் போராட்டக்காரர்கள் திரண்டு வந்து பிரதமர் வீட்டின் முன்னால் தாங்கள் கொண்டுவந்த இரத்தத்தைக் கொட்டிப் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version