Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழ் திரையுலகினர் ஆதரவு!

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்காத வட இந்திய பிரபலங்கள் மத்திய அரசின் போக்கை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர். இது அவர்களுக்கு பரவலாக ஆதரவையும் அவர்கள் மீது வெறுப்பையும் உருவாக்கிய நிலையில் தமிழகத்தில் திரையுலகில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் முதன் முதலாக வரவேற்பவர் ரஜினிகாந்த். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக தமிழகம் தொடர்பான அவரது கருத்துக்களும் அரசியல் வருகை அறிவிப்பும் கடுமையாக கேலிக்குள்ளானதோடு அவரை மக்களிடம் அம்பலப்படுத்தியும் வந்தது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ரஜினி அரசியலை விட்டே ஒதுங்கியும் விட்டார். கமல் அரசியல் அரவிந்த் கெஜ்ரிவாலில் மிதவாத பாஜக அரசியல்தான்.
ஆனால், தமிழக திரையுலகில் உள்ள சில பிரபலங்கள் விவசாயிகளை ஆதரித்துள்ளார்கள்.விவசாயிகள்

போராட்டம் தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது. அரசு மக்களின் நலனையே காக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்ல,கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்கும் விவசாயிகளின் உரிமைக்காக போராடுவதும், உறுதுணையாக இருப்பதுமே ஜனநாயகம்”என தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்
“மக்களுக்கு போராடும் உரிமை உள்ளது.அரசாங்கம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமே தவிற, புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அதை மக்கள் ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பது தற்கொலைக்கு சமம். உரிமைகளுக்காக போராடுவதும் ஜனநாயகமே” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த்

“உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்கள் விழுவதைப் பாருங்கள். கல்வி, இரக்கம், நேர்மை ஆகியவை ஒரு நாளைக் காப்பாற்றியிருக்கலாம். அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மற்றவர்களுடன் பப்பட் ஷோவிலுள்ள பொம்மைகளைப்போல் ஒன்றுகூடி ஒரே மாதிரி ஊதுகிறார்கள். அப்படித்தான் இந்த பிரசாரமும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது இந்தியாவின் வேறு மாநிலங்களில் குறிப்பாக வட இந்தியாவில் காண முடியாத சூழல்.

Exit mobile version