Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விலங்கொடிக்கும் பறையாக லண்டனில் முழங்கிய ஒலி : செந்தமிழினி பிரபாகரன்

parai_voice_of_freedom_inioruபறை— தமிழன் விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறையாக இலண்டன் நகரில் ஒலித்து போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள் எம் மக்கள். லண்டனில் நேற்று திங்கட்கிழமை St. James’s பூங்காவில் இந்த புதிய வகை போராட்டம் நடத்தி கவனஈர்ப்பை செய்து இருக்கின்றார்கள்.

நமது மண்ணையும் வளங்களையும் சிதைத்துச் சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையை இலங்கை அரசும் பன்நாட்டு வியாபார நிறுவனங்களும் இணைந்து முடுக்கிவிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சுண்ணாகத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை தனது இலாப நோக்கங்களுக்காகக் ராஜபக்ச அரசின் அனுசரணையுடன் கையகப்படுத்தியுள்ள நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் வளம் மிக்க யாழ்ப்பாண மண்ணை அழித்து வருகின்றது. மின் உற்பத்தியின் போது வெளியாகும் பெரும் தொகையன கழிவு எண்ணையை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றுவதனூடாக குடா நாட்டின் நீர், எண்ணை கலந்த பாவனைக்கு உதவாதாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் சுன்னாகம், மருதனாமடம்., கோப்பாய் உரும்பிராய் போன்ற பகுதிகளில் நன்னீர்க் கிணறுகள் எண்ணை படர்ந்தவையாகின. இறுதியாக தெல்லிப்பளையில் எண்ணை படர்ந்த கிணறுகளைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலை இன்னும் சில வருடங்கள் தொடருமானால் யாழ் குடா நாடு முழுமையும் நீர் வளமற்ற வரண்ட பிரதேசமாக மாற்றப்படும்.

எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் இலங்கையரான பிரித்தானிய அரசியல்வாதி. இலங்கையில் மொரட்டுவ பகுதியிலிருந்து பிரித்தானியாவிற்குக் குடிபெயர்ந்த நிர்ஜ் தேவா ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நீண்டகால உறுப்பினர். இன்று ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்.

கேட்பதற்கு யாருமற்ற அனைதைகளாக தமிழ்ப் பேசும் மக்கள் கைவிடப்பட்டுள்ளனர் என்ற எண்ணத்தில் இனப்படுகொலை அரசுடன் இணைந்து நிர்ஜ் தேவா என்பவர் பிரித்தானியாவிலிருந்து இலங்கை அரசின் அனுசரணையோடு செயற்படுகிறார்.

யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அழிப்பிற்கு எதிராகக் குரல்கொடுப்பவர்களையும், வழக்காடும் சட்டத்தரணிகளையும் பயங்கரவாதிகள் என அந்த நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

நிர்ஜ் தேவாவின் நிறுவனம் அப்பாவி மக்களை பயங்கரவாதிகளாக்கும் அதே வேளை அவர் பிரித்தானியாவிலிருந்து ஜனநாயகம் பேசுகிறார்.
நிர்ஜ் தேவாவின் இக் குற்றச் செயலை வெளிப்படுத்தி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், இலங்கையில் சட்டரீதியான வழிகளில் மின்னுற்பத்தியை நடத்தக் கோரியும், பேரினவாத அரசின் திட்டமிட்ட நாசகாரச் செயலை நிறுத்தக்கோரியும் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் லண்டன் கிளையின் முன்னால் நேற்றைய நாள் எம் உறவுகள் எழுச்சி போராட்டத்தை பறை அடித்து நடத்தி இருக்கின்றார்கள். அவர்களுக்கு எம் பாராட்டுக்கள்.

இன்று இதை தடுத்து நிறுத்த உடன் முன் வராவிட்டால் யாழ்ப்பாணம் மனிதர்கள் வாழமுடியாத பிரதேசமாக மாற்றப்பட்டுவிடும். நீருக்காக தென்னிலங்கையிலும் பல்தேசிய நிறுவனங்களிடமும் கையேந்தும் அவலம் தோன்றும். வளமான நமது தேசத்தின் மண் அழிக்கப்படும்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நிர்ஜ் தேவாவின் குற்றச் செயலுக்கு எதிராக லண்டனில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. நமது மக்களின் வாழ்விற்காகவும் மண்ணின் இருப்பிற்காகவும் இந்த ஆர்ப்பாட்டம் காலத்தின் முக்கிய போராட்டமாக இடம் பெற்றது. இது ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டுமேயன்றி நேற்றோடு கலைந்த போராட்டமாக இல்லாமல் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து எம் உறவுகள் அயராமல் போராடி வெற்றிபெறவேண்டும்..

செந்தமிழினி பிரபாகரன்

செந்தமிழினி பிரபாகரனின் இப் பதிவு ‘பறை-விடுதலைக்கான குரல்’ அமைப்பைச் சார்ந்ததல்ல. இதில் சில தகவற் தவறுகளும் காணப்படுகிறது, முழுமையான விபரங்களைக் கீழே காணலம்.

இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை

Exit mobile version