Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விலங்கு அளவுக்கு கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும் வேதனையான விஷயம்:செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள்.

chen4செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடி வருகின்றோம், நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம்,

ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம். சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,

பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறை வாயினில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கள் பெற்றோர் உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்,

எங்கள் மீது போலீஸôரால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறை முயல்வதில்லை, நாங்கள் இங்கு அடைக்கப்பட்டு இருப்பதால் எங்கள் மீதான வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸ். காவல்துறைக்கு உடனடி தேவையும் இல்லை.

எனவே நாங்கள் மூன்று மாத தண்டனை கிடைக்க கூடிய வழக்கிற்கு மூன்று வருடமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், எங்களது உறவுகள் மனைவி. பிள்ளைகள். உற்றார். உறவினர் வெளியே அகதி முகாம்களிலும் வெளிக்காவல் பதிவுகளிலும் பதிந்து கொண்டு துணை. ஆதரவு இல்லாமல் பரிதவித்து வருகின்றார்கள்,

இலங்கையில் இனக் கலவரம் முடிந்து விட்டது, ஆனால் இங்கோ நாங்கள் இந்த தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு வதைபடுகின்றோம், நாங்கள் எங்கள் உற்றார் உறவினர்களுடன் வெளிமுகாம்களில் இருந்து எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் எங்கள் அனைவரையும் வெளி முகாம்களுக்கு மாற்றக் கோரியும் பல விண்ணப்பங்களும். உண்ணா விரத போராட்டங்களும் நடத்தியும் உள்ளோம்.

ஆனால் விடுதலை தொடர்பாக எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை, எங்களின் பலரின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் பலியாகிவிட்டனர், பலர் காணாமல் போய்விட்டனர், பலரின் மனைவி மற்றும் குழுந்தைகள் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை.

இச்சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளோம், இந்த வதை முகாமில் சித்த பிரமை பிடித்தவர்கள் போல வாழ்ந்து வருகின்றோம், இப்படியே தொடர்ந்து இங்கு அடைக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக பைத்தியகாரர்களாக ஆகிவிடுவோம், எங்களை விடுதலை செய்யக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருந்தோம்.

அப்பொழுது அரசு சார்பில் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமெனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டி கேட்டு கொண்டதற்கு இணங்கி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்.

ஆனால் உண்ணாவிரதம் கைவிட்டு பதினைந்து நாட்கள் ஆகியும் தற்போது இங்கு வரும் அதிகாரிகளின் பேச்சுகளிலும் இருந்தும் எங்களின் விடுதலை தொடர்பாகவும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது.

எனவே எங்கள் அனைவரையும் இந்த தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,

அதிகாரிகள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தயங்கும் பட்சத்தில் நாங்கள் அனைவரும் மீண்டும் எமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என தீர்மானித்துள்ளோம் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகிறோம்,

மேலும் எங்கள் மீது அனுதாபமும் ஆதரவும் காட்டும் சக்திகள் எங்களுக்கு துணையாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு திரட்டி எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி எங்கள் விடுதலைக்கு உதவுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்,

எங்களை வெளியில் விடும்வரை காலவரையற்ற உண்ணாவிரத்தை நாம் தொடர்வோம், இவ்வாறு செய்வதை தவிர வாக்குறுதியை நம்பி இடைநிறுத்தியோ அவகாசம் கொடுத்தோ எம்மால் தீர்வு காணமுடியாது. இதை தவிர நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வகையோ வழியோ இல்லை, அதற்கேற்றது போலவே முன்கூட்டியே எல்லோருக்கும் எமது நிலைபாட்டையும் அறிவுறுத்தலையும் தந்துள்ளோம்,

எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை, எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்கு அனுமதியை கேட்கிறோம், தங்களால் முடியக்கூடிய கோரிக்கையை நாம் முன் வைத்துள்ளோம்,

உறுதியான தெளிவான முடிவுகளுடனேயே இவ்வழியை கையாள்கிறோம், இதில் இருந்து பின்வாங்குவதற்கு நாம் தயாராக இல்லை, எமது உறவுகள் துன்பப்படும் போது நீங்கள் எல்லா வசதிகள் செய்து தருவோம் என்ற வாக்குறுதி வழங்கி தொலைக்காட்சி பெட்டியையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு வந்து தருவது எமது உணர்வை கொச்சைப்படுத்துவதாக உள்ளது,

எந்த மிருகத்தை கூட கூண்டில் அடைத்து விட்டு அதற்கு என்ன உணவை கொடுத்தாலும் அதற்கு கூட சிறை வாழ்க்கையாக இருக்கும், பத்திரிக்கை செய்திகளில் காயப்படும் விலங்குகள் பறவைகள் எல்லாவற்றுக்கும் மருத்துவம் செய்து சுதந்திந்திரமாக உலாவருவதற்கும் எற்பாடு செய்வதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்கிறோம்,

திசைமாறி வரும் கொடிய மிருகம் என்றாலும் கூட அதை காப்பாற்றி அதை அனுப்புவதை காண்கிறோம், இவ்விலங்கு அளவுக்குகூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும் வேதனையான விஷயம், நாம் இங்கு இருக்கும் உறவுகளுடன் சேர்ந்து வாழவே கேட்கிறோம்,

இக்கோரிக்கையை நிறைவேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்திற்கு முன்னரே தங்களிடம் இம்மனுவை அனுப்பி வைக்கிறோம்,

இப்படிக்கு.
முகாம் வாசிகள்,
நாள் – 18,09,09
இடம்; சிறப்பு முகாம். செங்கல்பட்டு,

Exit mobile version