Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விண்வெளியில்; ஒரு பில்லியன் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவில் பாரிய வளையம் முதல் தடவையாக அவதானிப்பு!

சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள இதுவரை ஒரு போதும் அவதானிக்கப்படாத மிகப் பெரிய வளையம் நாசாவின் “ஸ்பிட்ஸர்’ விண்வெளி தொலைக்காட்டி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் “நேச்சர்’ விஞ்ஞான சஞ்சிகையில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

சனிக்கிரகத்தின் பிரதான வளையத்திலிருந்து 27 பாகை சரிவில் பனிக்கட்டி மற்றும் துகள்களை உள்ளடக்கிய இந்த வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 316 பாகை பரனைட் அளவான தாழ்ந்த வெப்பநிலையிலுள்ள இந்த வளையமானது வெப்பக் கதிர்ப்பில் பிரகாசிக்கக் கூடியதாகும்.

எனினும் இந்த வளையம் இதுவரை எவராலும் அவதானிக்கப்படாமல் இருந்ததாக நாசாவின் ஜெட் புரொபல்ஸன் ஆய்வுகூட பேச்சாளர் விட்னி கிளேவின் தெரிவித்தார். இந்த புதிய வளையமானது சனிக்கிரகத்திலிருந்து 3.7 மில்லியன் மைல் தொலைவில் 7.4 மில்லியன் மைல் தொலைவிற்கு விரிவுபட்டதாக காணப்படுகிறது.

இந்த வளையம் ஒரு பில்லியன் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவில் பாரியதாகும்.மேற்படி வளையம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சனிக்கிரகத்தைச் சுற்றி “ஏ’ முதல் “ஈ’ வரை பெயர் சூட்டப்பட்டுள்ள 7 பிரதான வளையங்களும் அநேக மங்கிய வளையங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

“ஸ்பிட்ஸர்’ விண்வெளி தொலைக் காட்டியை கொண்டுள்ள விண்கலமானது பூமியிலிருந்து 66 மில்லியன் தொலைவில் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version