Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுவிக்கப்பட்ட’ கிழக்கு; ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குவதாக அரசு கூறுகின்றது;ஆனால் கொலைகள், கடத்தல்கள் படுமோசமாக அதிகரிப்பு:மனித உரிமைகள் கண்காணிப்பகம்

26.11.2008.

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக கொலைகளும் கடத்தல்களும் அதிகரித்துள்ளதால் அப்பிராந்தியத்தில் மோசமடைந்து செல்லும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண் காணிப்பகம் (Human rights watch) வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல துஷ்பிரயோகங்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதக் குழுக்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

“விடுவிக்கப்பட்ட’ கிழக்கு மாகாணமானது ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குவதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால், கொலைகளும் கடத்தல்களும் அதிகரித்துள்ள பயங்கரமான துஷ்பிரயோகங்கள் சிறப்புரிமையின் பெயரால் இடம்பெறுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.

கடந்த செப்டெம்பரிலிருந்து நீதி விசாரணைக்கு புறம்பாக 30 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மைய சம்பவமாக 3 அக்டோபர் 2008 இல் மட்டக்களப்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்ட 2 தமிழ் இளைஞர்களின் சடலங்கள் 6 நாட்களின் பின்னர் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன. அச்சடலங்களின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததுடன் மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட அறிகுறிகளும் காணப்பட்டன. அச்சடலங்கள் கந்தசாமி குகதாஸ் (18 வயது), ஏ. குணசீலன் (26 வயது) ஆகியோருடையதெனவும் 4 அக்டோபர் 2008 இல் காலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவரின் உறவினர் ஒருவர் அவர்களை அன்றைய தினம் மாலையில் பொலிஸ் நிலையத்தில் பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால், நள்ளிரவு சிவில் உடையில் வந்தவர்களால் சிறையிலிருந்து அவர்கள் இருவரும் கொண்டு செல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2 இல் கல்முனை கடற்கரையில்தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அக்டோபர் 20 இல் கொக்கட்டிச்சோலையில் பணிபுரிந்த 3 சிங்கள கட்டிட ஒப்பந்தக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்மைக்கால கொலைகளுக்கு மேலதிகமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பகுதிகளில் 30 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழியில் பேசிய சிவில் உடை தரித்த ஆயுததாரிகளால் இக்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. இச் சம்பவங்கள் தொடர்பாக (கணிசமான அளவு) குடும்ப உறுப்பினர்கள் அச்சத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவிக்கவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உட்சண்டையால் பதற்றம் அதிகரித்த தருணத்திலேயே இக் கொலைகள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகள் வந்துள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இந்த துஷ்பிரயோகங்களுக்கு அரசின் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாக கிழக்கிலுள்ள பலர் நம்புவதாக, அடம்ஸ் கூறுகிறார்.

த.ம.வி.பு. கட்சியானது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் இப்போதும் சம்பந்தப்பட்டிருப்பதாக அடம்ஸ் கூறியுள்ளார். இக்குழுவினரை பதிலளிக்கும் கடப்பாடுடையதாக வைத்திருப்பதற்கு பதிலாக அரசாங்கம் ஆதரவு வழங்கியுள்ளது. சகல பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளதுடன், குற்றவாளிகளை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க வேண்டியதும் தேவையானதாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version