இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் பலமிழந்து விட்டது என்று அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டுவரும் கருணா தெரிவித்துள்ளார்.
எனினும் விடுதலைப் புலிகளை விரைவில் முறியடித்து விட முடியாது. அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்.
பிபிசி யின் சிங்கள மொழிப் பிரிவுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது:
விடுதலைப் புலிகள் தற்போது தற்காப்பு நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியதாக எந்தத் தாக்குதல்களையும் அவர்களால் நடத்த முடியாது. எனினும் விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடிப்பது என்பது சில மாதங்களில் நடந்து விடும் காரியம் அல்ல.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற இலங்கை ராணுவத்துடன் இணைந்து போராடுவோம்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ மற்றும் முக்கிய அமைச்சர்களை விரைவில் சந்தித்துப் பேச இருக்கிறேன். நாங்கள் இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் என்றார் கருணா.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் பிரிட்டனில் இருந்து கருணா இலங்கைக்குத் திரும்பினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் பிரிட்டன் சென்ற கருணா போலி பாஸ்போர்டில் அங்கு சென்றதான குற்றச்சாட்டின் அடிப்படையில் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக செயல்பட்ட கருணா கடந்த 2004-ல் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ என்ற இயக்கத்தை நிறுவினார்.