03.01.2008.
இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசவல்ல வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதே நேரம் ;
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரை, இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து, முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளிலும், ஒட்டுசுட்டான் பகுதியிலும் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மீது விமானக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
எனினும் இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கிளிநொச்சி நகரப்பகுதியில் தமது நிலைகளைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள படையினர் மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் முரசுமோட்டை மற்றும் புளியம்பொக்கணை பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்களில் சிவிலியன்கள் காயமடைந்திருப்பதாகவும், முல்லைத்தீவு கரையோரப்பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பொதுமக்களின் வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
முரசுமோட்டை பகுதியில் வெள்ளியன்று நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் சனிக்கிழமையன்று தர்மபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.