Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்வதற்கு அரசாங்கத்துக்கு நேரமில்லை- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கோ அல்லது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கோ அரசாங்கத்துக்கு நேரம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பயங்கரவாதிகள் தமது இராணுவச் செயற்பாடுகளுக்கே கூடுதல் நேரத்தைச் செலவுசெய்வார்கள் என சுயதொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் நேரத்துக்கு நேரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாரெனக் கூறி பேச்சுக்கு வரும் அதேநேரம், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோதல்களுக்குத் தம்மைப் பலப்படுத்திக்கொள்வார்கள் எனவும் கூறினார்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக ஒழிக்கப்படவேண்டும். மோதல்கள் மூலம் விடுதலைப் புலிகளை மரபுரீதியான மோதல்களிலிருந்து வீழ்த்தியுள்ளோம். தென்பகுதியில் வேலைநிறுத்தங்களை மேற்கொள்வது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். விடுதலைப் புலிகளை, அரசாங்கம் இராணுவ ரீதியாக ஒழிக்காவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். விடுதலைப் புலிகளின் காலடிகளில் சிக்கியிருந்த கிழக்கு மக்களை மீட்டதைப்போன்று, அரசாங்கம் வடக்கையும் மீட்டு அங்குள்ள மக்களுக்காக ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்தும்” என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

முதற் தடவையாக அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் தென்பகுதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக அவர் கூறினார்.

அத்துடன், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர்கள் வெற்றிபெறுவதற்குச் சந்தர்ப்பம் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பில் பெருந்தொகையான முச்சக்கரவண்டிச் சாரதிகள், நடைபாதை வியாபாரிகள், லொறி சாரதிகள், நாட்டாமைகள், தனியார் பேரூந்துப் பணியாளர்கள் உட்பட சுயதொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Exit mobile version