Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகளுக்குப் பணம் சேர்தவர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் சிறைத்தண்டனை

ltte_flagஉலகின் மூலைகளிலெல்லாம் குடிபெயர்ந்துள்ள தமிழர்களில் ஒரு குறித்த பிரிவினர் போராட்டம் என்ற பெயரில் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வாழ ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் தாம் போராட்டத்திற்கு எனச் சேகரித்த மில்லியன்களைச் சுருட்டிக் கொண்ட சிலர் இன்னும் தேசியம் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். தாம் பணம் சேர்தது ஒரு குறித்த அரசியல் நடவடிக்கைக்காக என்றும் அந்த அரசியல் காலவதியாகிப் போனதால் அப்பணத்தை மக்கள் மத்தியில் புதிய அரசியல் தேவைகளுக்காக மக்கள் முன்வைக்கிறோம் என்றும் கூட கூற மறுக்கும் இந்தகு கூட்டம் தாம் கொள்ளையடித்தவற்றுடன் சுகபோக வாழ்க்கை நடத்துகிறது.
பணத்தை மக்கள் முன் வைக்கத் தயாரற்ற நிலையில். ‘தலைவர் வருவார்’ என்று நீண்ட காலமாக மக்களை ஏமாற்றி வந்தனர். ஒடுக்கப்பட்ட தமிழப் பேசும் மக்களின் அரசியலைத் தாமே கையிலெடுத்துக்கொண்டு மக்களின் சொத்தைப் பற்றிப் பேச்செடுப்பவர்களைத் துரோகிகளாக்கினர். உலகின் அதி பயங்கர மாபியாக்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய இக்கூட்டம் அரசுகளோடு ஒட்டிக்கொண்டு தமது சொத்துக்களைப் பாதுகாக்க முயல்கிறது.
இதனால்தான் அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் கூட்டிவந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறோம் என்று போலி வேடம் போடுகின்றனர்.
இதற்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்துவதும், அவ்வப்போது அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துவதும், தேவைப்பட்டால் வன்முறைகளில் ஈடுபடுவதும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த இக்கூட்டங்களின் வழமையான செயற்பாடுகள்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்தைத் தேக்க நிலையில் வைத்திருப்பதும் இவர்களே. பணத்தைக் கொள்ளையடித்த பெரும் தலைகள் தப்பிக்கொள்ள கூலிகளாக வேலை செய்தவர்கள் காட்டிக்கொடுக்கப்படுகின்றனர்.
இவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள் நெதர்லாந்து நீதிமன்றத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஐவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து, ஹேக்கில் உள்ள நீதிமன்றமே நேற்று இந்த சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2003 ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்று ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டி சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.

Exit mobile version