09.08.2008.
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை காலையிலும் விமானப்படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள விஸ்வமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது சனிக்கிழமை காலை 10 மணிக்கும், புதுக்குடியிருப்புக்கு வடக்கே உள்ள இரணைப்பாலையில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளம் ஒன்றின் மீது இன்று காலை 9.55 மணிக்கும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தளங்களை அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.
பூநகரி பகுதியில் உள்ள நாகதேவன்துறைக்கு அருகில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு நிலையத்தையும், அதனோடு இருந்த படகுகள் நிறுத்துமிடத்தையும் விமானப்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டு வீசி தாக்கி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது.
எனினும் இரணைப்பாலை பகுதியில் இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆசிரியர் ஒருவர் உட்பட 2 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்