10.01.2009.
இலங்கையில் எல்டிடிஇ அமைப்பின் ராணுவ ரீதியான பின்னடைவை, ஒரு அரசியல் தீர்வை மறுப்பதற்கான வாய்ப்பாக ராஜபக்சே அரசு பயன்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு கூட்டம் கேரள மாநிலம் கொச்சியில் ஜனவரி 8, 9, 10 தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கையால் எழுந்துள்ள நிலைமை குறித்து கட்சியின் மத்தியக்குழு விவாதித்தது. இலங்கை ராணுவப்படையினர், எல்டிடிஇ அமைப்பின் தலைமையிடமான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளனர்.
எல்டிடிஇ-யின் ராணுவ ரீதியான பின்னடைவை, தமிழர் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை தாமதப்படுத்துவதற்கான அல்லது மறுப்பதற்கான வாய்ப்பாக ராஜபக்சே அரசு பயன்படுத்தக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பகுதிகளுக்கு முழுமையான சுயாட்சி அளிப்பதன் மூலம் அங்கே ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான ராஜீய ரீதியான முயற்சிகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த மோதலில், ஏராளமான பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மோதலுக்கு இடையே சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பாது காப்பையும், அவர்களுக்கு போதுமான உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதையும் உறுதிப்படுத்த ஐ.நா. சபையும், இதர சர்வதேச அமைப்புகளும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.