Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகளின் பணத்தையே தேர்தல் பிரசாரங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்றது!: ஜே.வி.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு தவறான அர்த்தம் கற்பித்து தேசத்துரோகமென அரசாங்கம் முத்திரை குத்துகிறது. புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை தம் வசம் வைத்துள்ள அரசாங்கம் புலிகளின் பணத்தினை என்ன செய்தது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் என்று ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில் அரசாங்கம் இன்று தேசப்பற்றை வியாபாரமாக்கியுள்ளது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விமர்சித்து பிழைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் தேசத்துரோகிகள். ஆனால் அரசாங்கத்தின் மோசடிகளுக்கு துணைபோனால் அவர்கள் தேசப்பற்றாளர்கள். தமிழர் கூட்டமைப்புடன் எந்தவொரு இரகசிய ஒப்பந்தத்தையும் ஜெனரல் சரத்பொன்சேகா செய்துகொள்ளவில்லை.

மக்களை மீளக் குடியேற்றுவது அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது போன்ற பொதுவான விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு கண்டே தமிழர் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவருகின்றது இதுதான் உண்மை.

கே.பியை கைது செய்த போது புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகளும் 16 கப்பல்களும் இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அக் கப்பல்களில் ஒரு கப்பலே மக்களை ஏமாற்ற இங்கு கொண்டு வரப்பட்டது. ஏனைய கப்பல்களுக்கு என்ன நடந்தது?

600 வங்கிக் கணக்குகளுக்கு என்ன நடந்தது. கே.பி எங்கிருக்கிறார். போன்ற விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தையே தேர்தல் பிரசாரங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்றது .

சர்வதேச புலி முக்கியஸ்தர் எமில்காந்தனுடன் “”இளைஞர்களுக்கான நாளை” அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பு என்ன? புலிகளின் தங்கத்தையும் பணத்தையும் பயன்படுத்தியே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மேற்குலக சதிகாரர்களுடன் அரசாங்கமே தொடர்பு வைத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் கைகள் சுத்தமானவை  என்றார்

Exit mobile version