Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகளால் ஆபத்து : ஈழத்தாய் பல்டி

jayalalithaபுலம் பெயர் நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரை மக்களை ஏமாற்றும் போலிகள் ஜெயலலிதாவை ஈழத் தாய் என்றும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும் தத்தமது தகுதிக்கும் மொழி வளத்திற்கும் ஏற்ப புகழ்ந்து பாடினார்கள். 2009 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற இனப்படுகொலையின் பிற்பட்ட காலப்பகுதி முழுவதும் ஈழத் தமிழர்கள் மத்தியில் முக்கிய இடம் வகித்தவர் ஜெயலலிதா. தேர்தல் காலங்களிலும் தமது தேவைகேற்பவும் ஈழத்தமிழர் பிரச்சனையை கையிலெடுத்துக்கொள்வார்.

தென்னிந்தியாவில் ஆதிக்கசாதி அதிகாரவர்க்கத்தின் நம்பிக்குரிய பிரதிநிதியும், ஊழல் பேர்வளியும், தமிழின விரோதியுமான ஜெயலலிதாவை நம்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே கோரிவந்தனர். ஜெயலலிதா ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதி என்பதை பல்வேறு தடவைகள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் சுட்டிக்காட்டிய போதும் தமது பிழைப்பிற்காக உணர்வாளர்கள் எனத் தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் பலர் ஜெயலலிதாவிற்கு ஈழத்தாய் வேடம் அணிவித்து உலாவவிட்டனர்.

தனது ஈழத்தாய் வேடத்தை தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்காகவும் ஜெயலலிதா பயன்படுத்தினார். இலங்கை அரசு ஜெயலலிதாவைத் திட்டுவதும், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக சினிமாக் கூத்தாடிகள் கண்ணீர்வடிப்பதுமாக அண்மைக்காலம் வரை ஒரு நாடகமே நடைபெற்றது.

உணர்வாளர் கும்பல்களின் முட்டாள்தனத்தையும் பிழைப்புவாத நோக்கத்தையும் பயன்படுத்திக்கொண்ட ஜெயலலிதா, ஐ.நா தீர்மானங்கள் நிறைவேற்றுவது போல தானும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஐ.நா போன்றே இலங்கை அரசுடன் முரண்பட்டுக்கொண்டார். புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என அறிக்கை வெளியிட்டார். சீமான் போன்ற புலிக்கொடிக் கட்சிகளோடு உறவை வளர்த்துக்கொண்டார்.

மீண்டும் மீண்டும் நயவஞ்சகர்களோடும், வாக்குப் பொறுக்கிகளோடும், அயோக்கியர்களோடும் இணைந்தே விடுதலைக்கான போராட்டத்தை நடத்தமுடியும் என்று கூறும் தமிழ்த் தலைமைகள் ஜெயலலிதா போன்ற மக்களின் எதிரிகளுக்காக நமது நண்பர்களைப் பகைத்துக்கொண்டு போராட்டத்தை அழித்து வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு வன்னி இனப்படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே ஜெயலலிதா ஈழத்தாய் ஆக்கப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவும், மத்தியில் பாரதீய ஜனதாவும் ஆட்சிக்கு வந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி புலிகள் மக்களோடு குந்தியிருந்து மாண்டு போனார்கள்.

90 களில் ரஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது ஜெயலலிதா ஈழ ஆதரவாளர்களைத் தேடித்தேடிக் கைது செய்தார். பலரை சிறையிலடைத்தார். ஈழத்தில் நடப்பது பயங்கரவாதிகளின் போராட்டம் என்றார். இவை குறித்தெல்லாம் எந்தச் சுய விமர்சனமும் இன்றி 2009 ஆம் ஆண்டில் போருக்குப் பின்னான சூழலைக் கையாள்வதற்காக அதிகார வர்க்கத்தின் அடியாளாக ஈழக் களத்தில் ஜெயலலிதா குதித்தார்.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மீளெழுச்சி பெறுவதைத் தடுப்பதற்கு புலம்பெயர் அரசியல் வாதிகள் போன்றே தன்னாலான பங்களிப்பைச் செய்துவிட்டு இப்போது புலிகளால் தனக்கு ஆபத்து எனக் கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
கேவலம் சொத்திற்காக இல்லாத புலிகளை உயிர்ப்பித்த ஜெயலலிதாவின் பயங்கரவாதம் என்பது சீமான், வை.கோ, புலம்பெயர் அமைப்புக்கள் உட்பட அனைவரும் தமிழ் மக்களுக்காக விலைகொடுத்து வாங்கிய அவமானம்.

புலிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தை பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்ற வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹா, இதன் மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடக்குமெனத் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமையன்று அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் செயல்படும் என்றும் அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாக, தீர்ப்பு வழங்கும் தேதி செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.

Exit mobile version