விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டது.
இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.10 அறிவிப்பாணை வெளியிட்டது. விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டு, மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை உறுதி செய்து 12.11.10 அன்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வக்கீல் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது.
ஐ.நா. கண்காணிப்புக் குழுஇந்த நிலையில் நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜரானார். மனுதாரர் புகழேந்தி தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் வைகோ ஆஜரானார்கள். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
எம்.ரவீந்திரன்:-
போர்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் சபையின் கண்காணிப்பு குழுவின் அறிக்கை என்னிடம் உள்ளது. ஈழத்தில் போர்க் குற்றங்கள் நடப்பதற்கு இலங்கை அரசு மட்டுமல்ல விடுதலைப் புலிகளும் காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்களை வன்னி பகுதியில் பிணையக் கைதிகள் போல் விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருந்தனர். இவர்களை கேடயமாக வைத்துதான் விடுதலைப் புலிகள் போர் புரிந்துள்ளனர். இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தமிழர்கள் சிக்கிக் கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பிணையக் கைதிகளாக இருந்த நிலையில், தப்ப முயன்ற தமிழர்களையும் விடுதலைப் புலிகள் கொன்று குவித்தனர். அங்கு வேறு அமைப்புகளை விடுதலைப்புலிகள் விட்டு வைக்கவில்லை. மனித உயிர்கள் மீது அவர்களுக்கு மரியாதையுமில்லை, இரக்கமும் இருந்ததில்லை.
தமிழகத்தில் அவர்களின் ஆதரவு இயக்கங்களால் பல குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியையும் இந்த மண்ணில் அவர்கள் படுகொலை செய்தனர்.
எனவே பல்வேறு குற்ற சம்பவங்களை முன்வைத்துதான் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது. இந்த தீர்ப்புக்கு தடை விதித்தால் அல்லது ரத்து செய்தால், இங்கு அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
வைகோ:-
தமிழ் ஈழம் மட்டும்தான் விடுதலைப்புலிகளின் கோரிக்கை. அதற்காக இந்தியாவில் இருந்து எந்த மாநிலத்தையும் அவர்கள் இணைக்க முயன்றதில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்துக் கொண்டு பொய்யான பிரசாரத்தை அவர்களுக்கு எதிராக கூறுகின்றனர்.
விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமல்ல. தமிழ் ஈழத்தை பெறுவதற்காக போராடும் சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்கள். நாம் போற்றும் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரைப் போன்ற போராட்ட வீரர்கள் அவர்கள்.
நீதிபதிகள்:-
விடுதலைப்புலிகளுக்கான தடையை நீக்கிவிட்டால் தமிழகத்தில் அமைதி குலைந்துவிடும் என்று மத்திய அரசு கூறுவதற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்? நோய் வந்த பிறகு சுகமாக்குவதைவிட, நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. உங்கள் கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கிறோம்.
ராதாகிருஷ்ணன்:-
விடுதலைப்புலிகள் இயக்கம் என்று ஒன்று இல்லை என்று 2009-ம் ஆண்டில் மத்திய அரசு கூறியது. ஆனால் அதை தடை செய்து 2010-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இல்லாத இயக்கத்துக்கு தடை தேவையில்லை.
சிதறிக்கிடக்கிற விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கூடிப்பேசி அதை வலுவாக்க முயலுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரம் எதையும் தாக்கல் செய்யவில்லை.
2009-10-ம் ஆண்டுகளில் அந்த இயக்கத்தினால் ஒரேயொரு குற்றசம்பவம் மட்டுமே நடந்தது. ஏதோ ஒரு சம்பவத்துக்காக ஒரு இயக்கத்தை தடை செய்வது தேவையற்றது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தள்ளிவைப்பு
இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். வைகோவுடன் ம.தி.மு.க. வக்கீல்கள் தேவதாஸ், நன்மாறன் உட்பட பலர் ஆஜரானார்கள்.