இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.
உயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்திற்கும் கோட்டைகட்டினகுளத்திற்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் கொல்லப்பட்டுள்ளதாய்த் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
நாகலிங்கம் மீதான தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்; ஆனால் இராணுவத் தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை