விக்னேஸ்வரனின் இந்த உரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. மக்களுக்காகப் போராடி மரணித்த போராளிகளை விக்னேஸ்வரன் கொச்சைப்படுத்துகிறார் என்பதில் ஆரம்பித்து பல்வேறு தாக்குதல்களை சந்திக்கிறது. விக்னேஸ்வரன் அதிகாரவர்க்கத்தின் அடியாள் படையைச் சார்ந்தவர் என்பதும் அதனால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொற்றிக்கொள்ள இடம்கொடுத்தது என்பதும் தெரியாத ஒன்றல்ல. மக்களின் வாக்குப் பொறுக்குவதையே நோக்கமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியிலிருந்து இவ்வாறு வெளிப்படையாகப் பேச முடியுமானால் மக்களின் மனோ நிலையில் போராட்டங்களுக்கு எதிராக ஏற்பட்டுவரும் மாற்றங்களியும் கருத்தில்கொள்ளாமல் இருக்க முடியாது.
இதற்கு விக்னேஸ்வரன் மட்டும் காரணமல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்திய புலம்பெயர் மற்றும் தென்னிந்திய வியாபாரிகளும் இதன் காரணகர்த்தாக்களே.
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏகத்தலைமை என்ற தலையங்கத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள் இன்று ஒரு பிரதேசத்தையே இராணுவ ஆட்சிக்குள் கொண்டுவந்து மக்களை இலங்கை இராணுவக் கட்டமைப்பின் அடிமைகளாக மாற்றியுள்ளது. இப் போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை விமர்சன சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு, தவறுகளை ஒப்புக்கொண்டு புதிய ஆயுதம்தாங்கிய மக்கள் யுத்தத்திற்கான திட்டத்தை முன்வைக்கத் தவறுகின்ற ஒவ்வொரு கணமும் புலிகளின் தவறுகள் விக்னேஸ்வரனுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வழங்கப்படும் வாய்ப்புக்களாகிவிடும்.
நாங்கள் தவறு செய்திருக்கிறோம், அது எங்கள் அரசியல் வழிமுறையின் தவறே தவிர தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் தவறானதல்ல என்றும், பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்கப்பட மக்களின் தலைமையில் புதிய அரசியல் வழிமுறைகளூடாக முன்னெடுக்க வேண்டும் என்றும் நேர்மையான அரசியல் முன்வைக்கப்படும்வரை விக்னேஸ்வரனின் அரசியலுக்கான வழிகள் திறந்தே இருக்கும்