வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக “வரிச்சுமைக்கு எதிரான மக்கள் சக்தி’ எனும் புதிய போராட்ட பிரசாரமொன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருப்பதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்த பிரசார நடவடிக்கைகள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களின் ஆதரவைத் திரட்டும் முகமாக கிராமம் கிராமமாகவும் நகரம் நகரமாகவும் இந்தப் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாக ஜே.வி.பி.யினரால் நேற்று புறக்கோட்டை மெனிக் சந்தை பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் வரிகளை அதிகரிக்கக்கூடும் என்ற நிலைமையிலேயே ஜே.வி.பி.யினர் இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். எனினும் வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாகவே உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதனாலேயே உள்நாட்டிலும் விலைகள் அதிகரித்திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.இதேநேரம், விலைகளைக் குறைவாகப் பேண உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 15 ரூபாவினாலும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் வர்த்தக அமைச்சின் செயலாளர் அநுர ஸ்ரீவர்தன தெரிவித்துள்ள போதிலும் விலைகளைக் குறைக்க இவை போதாதென வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
விலைவாசி உயர்வு, அரசின் அதிகூடிய வரி விதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக ஜே.வி.பி. நேற்று கொழும்பு மெனிங் மார்க்கட் பகுதியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.