Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் அனுப்பியது தொடர்பான விபரங்கள் இந்திய பிரதமர் அலுவலகத்தில் இல்லை.

இருபதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போபால் கொடுமையின் குற்றவாளி வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்தார் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி. அந்த நேரத்தில் அமெரிக்க அரசிடமிருந்தோ, அதிகாரிகளிடமிருந்தோ எவ்வித தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இதற்கான ஆதாரமும் பிரதமர் அலுவலகத்தில் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தொடரப்பட்ட வழக்கில் இந்த பதிலை பிரதமர் அலுவலகம் அளித்துள்ளது. 1984-ம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையிலிருந்து டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு விஷ வாயு வெளியேறியது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இன்றளவும் பல்வேறு உபாதைகளுடன் உயிர் வாழ்கின்றனர். இந்த வழக்கு குறித்து சமீபத்தில் போபால் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளித்தது. ஆனால் முக்கியக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த ஆண்டர்சனை மாநில போலீஸ் கைது செய்தது. நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும் கூறிச் சென்ற ஆண்டர்சன் பின்னர் இந்தியாவுக்கு வரவேயில்லை.வாரன் ஆண்டர்சன் தப்பிச் செல்வதற்கு மத்தியப் பிரதேச மாநில அரசு காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவரை அனுப்பி வைத்ததாக அப்போதைய முதல்வர் அர்ஜுன் சிங் தெரிவித்தார். இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இந்த வழக்கு தொடர்பாக ஐந்து கேள்விகள் கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட விவரம், இந்த வழக்கில் தெளிவான நிலை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. போபால் விஷ வாயுக் கசிவு சம்பவம் நிகழ்ந்த பிறகு பிரதமர் அலுவலக அதிகாரிகள் எந்தெந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். அல்லது எந்தெந்த நாடுகளிடமிருந்து பிரதமர் அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்ற விவரம் கோரப்பட்டிருந்தது. 1984-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையான காலத்தில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியுடன், அமெரிக்க அரசாங்கத்திலிருந்து உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் எவரும் பேசியுள்ளனரா என்றும் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமர் அலுவலகம் கோரப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகத்தில் இது தொடர்பாக எவ்வித ஆதாரமும் இல்லை என்று மத்திய தகவல் துறை அதிகாரி சஞ்ஜுக்தா ராய் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து மக்களைக் குழப்பி வருகின்றன. உண்மையிலேயே மத்திய அரசிடம் இதற்கான ஆதாரம் இல்லையா அல்லது ஆதாரத்தை வைத்துக் கொண்டே மறைக்கின்றனவா என்பது தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் வாரன் ஆண்டர்சன் மாநில அரசின் விமானத்தில் ஏறி தில்லி சென்றுள்ளார். அதன் பின்னர் தில்லியிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார் என்று போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதிடும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ரச்சனா திங்ரா தெரிவித்துள்ளார். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியான தகவல் இந்த வழக்கில் உண்மை நிலையை வெளிக்கொணர உதவியாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version