Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாக்குறுதிகளும் வார்த்தையாலங்களும் தமிழ் மக்கள் கேட்டுக்கேட்டு புளித்துப்போனவை: வ.திருநாவுக்கரசு.

 

நாடு “மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது’ (United Again) என்ற செய்தி சென்ற 18 ஆம் திகதி ஆங்கில இதழொன்றில் (Daily Mirror) வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு முதல்நாள் வன்னியில் சிக்குண்டிருந்த மீதியான பொது மக்கள் மீட்கப்பட்டு நாடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அதனை அறிந்த நாட்டு மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டதோடு, நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் பட்டாசுகள் கொளுத்தி தேசியக்கொடிகளும் உயர்த்தப்பட்டன என்று அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த நாள் அதே இதழில் “ஒரு தேசம் ஒரு மக்கள்’ (One Nation, One People) என தலையங்கம் தீட்டப்பட்டிருந்ததுடன், பிரபாகரன் கொல்லப்பட்டார், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு வாழ்த்து என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் 20 ஆம் திகதி வெளியாகிய அரச கட்டுப்பாட்டிலுள்ள “டெயிலி நியூஸ்’ “ஒரு நாடு, ஒரு தேசம்’ (one conutry, one Nation) மக்கள் வெற்றி, ஜனாதிபதி சபையில் உரை “தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியானது ஒரு போதும் தமிழ் மக்களின் தோல்வி அல்ல’ என்று கூறினார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மையில் மேலே குறிப்பிட்டிருப்பது போல நாடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதா? அல்லது மேலும், துருவப்பட்டுள்ளதா? என்பதனை ஆழமாகச் சிந்தித்துப்பார்க்கவேண்டும். ஏனெனில், மக்கள் வவுனியாவிலுள்ள முகாம்களில் தற்போது சிறைவைத்துள்ள பாணியில் தேங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். பற்பல குடும்பங்கள் சிதறுண்டு மனம் வெதும்பி அந்நியப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மீள் குடியேற்றம் மற்றும் இயல்பு வாழ்க்கை எப்போது? அரசியல் தீர்வு எப்போது? போன்ற மற்றும் இன்னோரன்ன கேள்விகள் தமிழ் மக்களின் மனங்களைக் குடைந்து கொண்டிருக்கும நிலையில், நாடு மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது எனயாரும் எண்ணுவது நகைப்புக்குரியதாகும்.

ஐ.நா.செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயம்

சென்ற சனி இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் பிரமாண்டமான “மெனிக் ஃ பாம்’ இடம் பெயர்ந்த மக்கள் முகாமைப் பார்வையிட்டதோடு, இறுதி மோதல் நடந்த புதுமாத்தளன் பகுதியை விமானத்திலிருந்து சுற்றிப்பார்த்த பின் கூறியதாவது, “நான் உலகெங்கும் சென்று இத்தகைய இடங்களைப் பார்வையிட்டிருக்கிறேன். ஆனால், தற்போது நான் கண்ணுற்றவை தான் கொடிதிலும், கொடிய காட்சியாகும்’ என்பதாகும்.

மேலும், ஏலவே சர்வதேச செஞ்சிலுவைக்குழு (ICRC) விடுத்திருந்த அறிக்கையொன்றில் “வன்னியில் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத பேரவலத்தினைக் கண்ணுற்றோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. “ஏறத்தாழ 50,000 மக்கள் மிக சொற்பமான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளோடுதான் வாழ்ந்து வருகின்றனர்’ என ஐ.நா. அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டினிச் சாவுகளும் இடம்பெற்றுள்ளதாக அறிக்கைகள் கூறின. எவ்வாறாயினும் வழக்கம் போலவே அதனைச் சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (undp) இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி டக்ளஸ் தேஹ் கூறிவைத்துள்ளதையும் பார்த்து விடுவோம், “யுத்த முனையில் படுமோசமானதும் (Horrendous) ஏற்றுக் கொள்ள முடியாத வகையிலுமான உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றன. நாம் உலக சமூகத்தினர் என்ற வகையில் நெருக்கடிமிக்க யுத்த வேளைகளில் எதனைச் செய்யமுடியும், அல்லது எதனைச் செய்ய முடியாது என்பதற்குச் சில வரையறைகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டுதான் வருகின்றோம்’ என டக்ளஸ் தேஹ் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது இலங்கை அரசினாலேயே அன்று உருவாக்கப்பட்டது. இன்று அவ்வியக்கம் இலங்கை அரசினாலேயே அதாவது, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டுள்ளதாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் எல்லா உயர்மட்டத் தலைவர்களும் கொல்லப்பட்டதோடு, யுத்தம் முடிவுற்றுள்ளதென பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்ததையடுத்து இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் விமானப்படைத் தளபதி றொசான் குணத்திலக்க ஆகியோருக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

கொண்டாட்டங்கள்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து முன்னெப்போதும் இல்லாதளவு கோலகலமாக் கொண்டாட்டங்கள் குதூகலங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பிரதானமானதாக சென்ற வெள்ளி இடம்பெற்ற பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தையும் குறிப்பிடலாம். எதிர்வரும் மாதத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

1948 இல் அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த இந்த நாடு 2009 லேயே உலகின் மிக மூர்க்கத்தனமான இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரப்பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருந்தார். அதனை அடையாளப்படுத்து முகமாகவே அண்மையில் அவர் ஜோர்தானுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தினைச் சுருக்கிக் கொண்டு நாடு திரும்பியபோது விமானத்திலிருந்து இறங்கியதும் மண்ணை முத்தமிட்டார்.

இவ்வாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.எம்.சுஹையிர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையொன்றில் (டெயிலி மிரர் 25.05.09) விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக நடத்தப்படும் கொண்டாட்டங்களில் முஸ்லிம்களும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பின்வருமாறு அவர் கூறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

” 3 தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதும் படுகொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் விடுதலையடைந்துள்ள நிலையில், நாடு பூராவும் வாழும் முஸ்லிம்கள் தம்மையும் கொண்டாட்டங்களில் இணைத்துக்கொண்டுள்ளனர். உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் அழிக்கப்பட்டதானது 1505 இல் போர்த்துக்கேயர் நாட்டை ஆக்கிரமித்த காலம் முதல் ஏறத்தாழ 504 ஆண்டுகளுக்குப்பின் முழுநாடும் விடுதலை பெற்றுள்ளதைக் குறிக்கிறது’

ஜனாதிபதி ராஜபக்ஷ 19.05.09 இல் பாராளுமன்றத்தில் ஆற்றிய வெற்றி உரையில் குறிப்பிட்டிருந்த வரலாற்றுக்குறிப்புக்கு ஒரு வகையில் ஒத்ததாகவே சட்டத்தரணி சுஹையிர் மேலே தெரிவித்த கருத்தும் அமைகிறது.

இதனிடையில் தேசிய விடுதலை முன்னணி (NFF) தலைவர் விமல் வீரவன்ச, பா.உ, கருத்து தெரிவிக்கையில், இலங்கை 1948 இல் பெற்ற வெற்றியைக்காட்டிலும் தற்போது வடக்கில் அடைந்துள்ள வெற்றியானது 100 மடங்கு மகத்தானதென தனது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மறுபுறத்தில் உண்மையில் இந்த நாட்டின் அரசியல் பரப்பிலிருந்து சிங்கள பேரினவாத நச்சு நீக்கப்பட்டாலேயே அனைத்து இலங்கை மக்களுக்கும் உண்மையான விடுதலை உண்டாகுவதற்கு வழிபிறக்கும். தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுகாண்பதற்கு சிங்கள பேரினவாதிகள் அன்று முதல் தடைக்கல்லாயிருந்ததன் காரணமாகவே விடுதலைப் புலிகள் இயக்கமே தோற்றம் பெற்றது. இந்த வரலாற்று உண்மையினை ஆளும் வர்க்கத்தினர் ஒரு கணமேனும் மீட்டுப்பார்க்க நினைப்பதில்லை நல்லாட்சியில் நாட்டமுள்ளவர்களுக்கு அது அவசியமானதாகும்.

கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடத்தப்பட்டு வரும் நிலையில் ஜே.வி.பி. தரப்பினர் இந்த வெற்றியை எந்தவொரு மக்கட் பிரிவினரதும் மனம் நோகாத வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் கைகோர்த்துக் கொண்டாட வேண்டுமெனக் கோரிக்கை விட்டுள்ளனர். முன்னாள் ஜே.வி.பி. தலைவர் றோகன விஜேயவீர ஐ.தே.க. அரசாங்கத்தினால் கொல்லப்பட்ட போது இன்று போல் கொண்டாட்டங்கள் இடம் பெறவில்லை. ஆனால் இன்றைய கொண்டாட்டங்கள் எவரினதும் மனதைப் புண் படுத்தாமல் நடத்தப்பட வேண்டுமெனவே ஜனாதிபதி ராஜபக்ஷவும் கூறியுள்ளார். இக் கொண்டாட்டங்கள் யாரையாவது மனம் நோகவே செய்யும் என்பதே இத்தகைய கூற்றுக்களில் தொக்கி நிற்கின்றது எனலாம். ஆக, அளவு கடந்த கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் “ஆறுதல்’ வார்த்தைகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன.

முன்னாள் இராஜதந்திரி காட்டிய முதிர்ச்சி

இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் இராஜ தந்திரி ஒருவர் கூறியுள்ள கருத்து கவனிக்கத் தக்கதாகும். அதாவது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து ஒரு பெரிய வெற்றிக்களிப்பு மேற்கிளம்புவது பற்றி அரசாங்கம் சற்று எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென ஓய்வு பெற்ற இராஜ தந்திரியும் அரசியல் விமர்சகருமாகிய நந்தா கொடகே கூறியுள்ளார். “இராணுவ ரீதியில் வெற்றி யீட்டுவதாவது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தைத் தோற்கடிப்பதாக கருதுவதற்கு இடமளிக்கக் கூடாது. சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு சிறுபான்மையினரையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்பதில் ஜனாதிபதி உறுதியாயிருக்கிறார் என நான்நம்புகிறேன்’ எனவும் கொடகே கூறியுள்ளார். அப்படியாயின் அது ஆக்கபூர்வமான செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அரசியல் தீர்வு

சமாதானத்தை வென்றெடுப்பது தான் உண்மையான வெற்றி என சென்ற 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் தீர்வு தான் அவசியம் என்பதே சர்வதேச சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்து வலியுறுத்தப்பட்டு வரும் விடயமாயுள்ளது. இதனையே ஐ.நா.செயலாளர் நாயகமும் தனது அண்மைய இலங்கை விஜயத்தின் போதும் வற்புறுத்தினார்.

ஜனாதிபதியின் உறுதி மொழி

தனது அண்மைய ஜோர்தானிய விஜயத்தின் போது விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியினை அங்கு அறிவித்த அதேவேளை நாடு துண்டாடப்படுவதைத் தவிர்ப்பதற்கு தமிழரின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதே தனது அடுத்த நடவடிக்கையாயிருக்குமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். எல்லா மக்களும் மரியாதையாகவும் கௌரவமாகவும் வாழ வழிசெய்யும் வகையிலான சுதந்திர தேசத்தை நிர்மாணிப்பதே தனது நோக்கமென அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் காலமெல்லாம் காத்திருந்தவர்கள். அவர்களுக்குத் தேவை செயல், அவர்களுக்குத் தேவை அரசியல் தீர்வு, சமத்துவம் மற்றும் சுயாட்சி அதிகாரம். அது தான் சாதாரண ஜனநாயகம். வாக்குறுதிகளும் வார்த்தை ஜாலங்களும் அவர்கள் கேட்டுக் கேட்டுப்புளித்துப்போனவை, என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

“ஒரு தேசம், ஒருமக்கள்’, “ஒரு நாடு, ஒரு தேசம்’ எனும் சுலோகங்கள் ஒற்றையாட்சி கோட்பாட்டின் மறுவடிங்கள் மாறாக, இலங்கை ஒரு பல்லின, பலமத நாடு. இலங்கை ஒரு பன்மை சமுதாயம். இந்த யதார்த்தத்தினைப் புறந்தள்ளி விட்டு சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனைக்கு ஆளும் வர்க்கத்தினர் இடமளித்து வந்ததன் காரணமாக யுத்தமே வெடிப்பதற்கு வழிசமைக்கப்பட்டது.

“சிறுபான்மையினர்’ என்றொன்றில்லை. அப்பதம் இந்த அரசியல் அகராதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றார் ஜனாதிபதி ராஜபக்ஷ. இதனை நாம், மேலோட்டமாகப் பார்த்து திருப்தியடையலாம் என்பதற்கில்லை. உண்மையில் தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையினராயுள்ளனர். மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களை சிறுபான்மையினர் என்று யாரும் கூற முடியாது. அந்த வகையில் தமிழர் முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் யாரும் சிறுபான்மையினர்கள் அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளது சரியான நிலைப்பாடாகும். நாட்டை நேசிப்பவர்களை ஒரு பக்கமாகவும் நேசிக்காதவர்களை மறுபக்கமாகவும் ஜனாதிபதி வேறுபடுத்தியதோடு, நேசிக்காதவர்கள் சிறிய எண்ணிக்கையினர் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறிய எண்ணிக்கையினர் மத்தியில் தான் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கும், சமாதானத்துக்கும் பொருளாதாரத் அபிவிருத்திக்குமான தடைக்கற்கள் காணப்படுகின்றன. கடந்த கால அரசாங்கங்கள் இவர்களின் தாளத்திற்குத்தான் ஆடி வந்தன. இதனை ஜனாதிபதி ராஜபக்ஷ சரியாக இனங்கண்டு விட்டாராயின், அவருக்கு நன்கு தெரிந்த இன்னொரு விடயத்தையும் அவர் அவ்வப்போது மக்கள் மத்தியில் கூறுவாராயின் வரவேற்புக்குரியதாயிருக்கும். அதாவது, நாட்டுக்குப் பூரண சுதந்திரம் வேண்டுமென்று அன்று முதன்முதலில் குரல் கொடுத்தவர்கள் ஹென்றி பேரின்பநாயகம் தலைமையிலான யாழ்ப்பாண இளைஞர் என்பதாகும்.

Thanks:Thinakkural.

Exit mobile version