Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாக்குறுதிகளுக்காவன்றி அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

வாக்குறுதிகளுக்காவன்றி அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
– மக்கள் தொழிலாளர் சங்கம் –
voteஜனாதிபதி தலைமையிலான சிங்கள பேரினவாத பாசிச ஆட்சிக்கு எதிராக மலையக மக்கள் அவர்களின் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். மலையக மக்களுக்கு தனி வீடுகள் கட்டிக்கப்படும் என்ற வெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளுக்கு அப்பாலான அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் மலையக மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கம் ஜனாதிபதி தேர்தல் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழுவின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற இரண்டு பிரதான வேட்பாளர்களும் மலையக மக்களுக்கு வீடுகளை கட்டித்தரப் போவதாக அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் வாக்குறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விஞ்ஞாபனத்தில் 7 பேர்ச் காணியில் வீடு கட்டித்தரப்படும் எனவும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனத்தில் எத்தனை பரப்பளவு காணியில் வீடு கட்டித்தரப்படும் என்று விபரிக்கப்படாவிட்டாலும் வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளதை வரலாற்றுச் சாதனை எனக்கூறி மலையக மக்களின் தலைவர்கள் எனப்படுபவர்கள் பிரசாரம் செய்து அவரவர் அரசியல் இருப்பிற்காக அவர்கள் ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மலையக மக்களை வேண்டி வருகின்றனர்.
மலையக மக்களின் காணி வீட்டு உரிமையை வென்றெடுப்பது தேர்தலில் புள்ளடிப் போடுவது போன்ற இலகுவான விடயமல்ல. தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டிருப்பினும் அவ்வுரிமையை வென்றெடுப்பது அவ்வளவு சுலபமனா காரியமாக இருக்கப் போவதில்லை. இதற்கு முன்பு இலங்கையை ஆண்ட பல அரசாங்கங்களும் மலையக மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தன என்பதை மறந்துவிடலாகாது. எனவே புதிய தேர்தல் வாக்குறுதிகளாக கூறப்படுவதால் மட்டும் வீடு, காணி உரிமையை பெற்றுவிட முடியாது.
மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை என்பது தேர்தல் விஞ்ஞாபனத்திற்குள் வரையறுக்கப்பட்டு ஏட்டுச் சுரைக்காயாக இருக்க முடியாது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அப்பால் விரிவான பல மக்கள் நடவடிக்கைகள் ஊடாகவே அவ்வுரிமையை வென்றெடுக்க முடியும்.
எனவே ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை அடிப்படையாக கொள்ளாது பரந்த நோக்கில் ஜனாநாயகத்தை மீட்பதற்கான ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்து ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும்.
சட்டத்தரணி இ.தம்பையா
செயலாளர்
மக்கள் தொழிலாளர் சங்கம்

-இச் செய்தி இனியொருவின் கருத்தல்ல-

Exit mobile version