தேர்தல் பெறுபேறுகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே வாக்களிப்பு வீதம் தொடர்பான விபரம் அறிவிக்கப்படுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி நேற்று மாலை தெரிவித்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் சுமார் 50-52 வீதமளவில் வாக்களிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்தது.
இதேவேளை, நேற்று சூட்டுச் சம்பவமொன்று உட்பட வன்முறைகள் இடம்பெற்றதாகவும் இவற்றில் அதிகளவான சம்பவங்கள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுயாதீனமான தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறினர்.
நேற்றுக் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நான்கு மணித்தியாலங்களில் தேர்தல் வன்முறைகள் தொடர்பான 160 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் வன்முறை கண்காணிக்கும் நிலையம் (சி.எம்.ஈ.வி.) தெரிவித்தது. அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் வாக்காளர்களை அச்சுறுத்தியுள்ளதாக அறிக்கைகள் கிடைத்திருப்பதாக சி.எம்.ஈ.வி. இன் பேச்சாளர் டி.எம்.திஸாநாயக்க தெரிவித்தார். சில இடங்களில் இனந்தெரியாதவர்கள் வாக்காளர் அட்டைகளை அபகரித்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றைய வாக்களிப்புத் தொடர்பாக இந்த நிலையத்தின் வடக்கு,கிழக்கு இணைப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்;
காலையில் மக்கள் சற்று ஆர்வத்துடன் வாக்களித்ததைக் காணமுடிந்தது. பல பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. நாவலப்பிட்டியில் ஆளுங்கட்சி வேட்பாளரொருவரின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய முன்னணி,ஜனநாயக தேசியக் கூட்டணிக் கட்சிகளின் முகவர்களே வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுமதிக்காது விரட்டியுள்ளனர். அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பொத்துவில்,அக்கரைப்பற்று பகுதிகளில் பதற்றம் நிலவியது. தென்பகுதியில் காலி மாவட்டத்தில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே கட்சி ஆதரவாளர்களிடையே இந்த மோதல்கள் இடம்பெற்றதாக அறியவருகிறது.
ஏனைய பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்களிப்பு மிகவும் குறைவாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 1617 வீத வாக்களிப்பே இடம்பெற்றதாக அறியவருகிறது. இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதேவேளை, சுதந்திரமானதும் நியாயமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான பிரசார அமைப்பு (கபே)கருத்துத் தெரிவிக்கையில்;நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு வீதம் 5055 வீதமாகவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 74 சதவீதம் வாக்களிப்பு இடம்பெற்றது என்று கூறியுள்ளது.
இது இவ்வாறிருக்க நேற்றைய தேர்தலானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
“தேர்தல் முடிவுகள் ஏற்கனவே வெளிவந்துவிட்டதாக மக்கள் உணர்கிறார்கள். ஆதலால் ஏன் வாக்களிக்க வேண்டுமென அவர்கள் கருதுகின்றனர். நான் வாக்களிக்கவில்லை என்று மட்பாண்டப் பொருட்களை விற்பனை செய்யும் ஜி.பிரியந்த (36 வயது) என்பவர் ஏஎவ்பி செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். அதே
சமயம், புலிகளுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக ராஜபக்ஷவின் கட்சிக்குத்தான் வாக்களித்ததாக செச்மினி சதுரிகா என்ற பெண் கூறினார். இலங்கையின் சகல பகுதிகளிலுமிருந்தும் கிடைத்த செய்திகளின் பிரகாரம் சிறிய எண்ணிக்கையானவர்களே வாக்களித்ததாக அறிய வருகிறது என்று கொழும்பிலுள்ள தேர்தல் அதிகாரியொருவர் கூறினார். நேற்றைய தேர்தலில் 19 ஆயிரம் சுயாதீனக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால், முறைகேடுகளை தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இது இவ்வாறிருக்க பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார்.