Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் உள ரீதியாக பெருமளவில் பாதிப்பு.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் உள ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கொட மனநல வைத்தியசாலையின் பிரபல மனநல மருத்துவர் மகேசன் கணேசன் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாமில் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அங்கு விசேட மன நலப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 40க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் சிலர் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
 
  போர் கடுமையான பாதிப்புக்களினால் சிலர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் சொந்தங்கள் அற்றநிலையில், அநாதரவான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் மேலும் கூறியுள்ளார்.
நடமாடும் சுதந்திரம், உறவினர்களுடன் இருக்கும் சுதந்திரம் என்பன இல்லாத நிலையில் இவ்வாறான பாதிப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பிற்கு காரணம் எனத் தெரியவருகிறது.

இவ்வாறு அழுத்தங்களுக்கு மத்தியிலும், இடைத்தங்கல் முகாம் பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள இடைத்தங்கல் முகாம்களிலிருந்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்வதாக கிடைக்கப் பெற்றத் தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்வதாகத் தெரியவந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் தப்பிச் செல்பவர்கள் தொடர்பில் கண்காணிக்க பிரதிக் காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையில் விசேட குழு ஒன்றை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ச  நிறுவியுள்ளார் எனவும் தெரியவருகிறது.

Exit mobile version