Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வவுனியா ஊடகவியலாளருக்கு ஸ்ரீரெலோ உதயராசா கொலை மிரட்டல்!

VINO PHOTOSகிராம அலுவலர் ஒருவர், பழைய கற்பகபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தை சேர்ந்த மூவர் தன்னை தாக்கியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி பொலிஸாரைக்கொண்டு மூவரையும் கைதுசெய்ய வைத்தமை, புனையப்பட்ட இந்தச்சம்பவத்துக்கு கிராம மக்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது இராணுவத்தை ஏவி விட்டு கிராம மக்களை மிரட்டியமை தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

யாழிலிருந்து வெளிவரும் தினசரிப்பத்திரிகையும் அச்செய்தியை இன்று (06.10.2014) பிரசுரித்திருந்தது.

குறித்த பத்திரிகையுடன் ஸ்ரீரெலோ கட்சியின் தலைவர் உதயராசாவிடம் சென்ற கிராம அலுவலர், உதயராசாவிடம் பத்திரிகை செய்தி தொடர்பில் முறையிட்டுள்ளார்.

(தனிநபர் உரிமை மீறப்பட்டிருந்தால் குறித்த பத்திரிகை காரியாலயத்துக்கு அல்லவா கிராம அலுவலர் சென்று நீதி கேட்டிருக்க வேண்டும். ஏன் உதயராசாவிடம் போனார்? அவ்வாறாயின் கிராம அலுவலர் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி பொதுமக்களை கைது செய்ய வைத்தமை, பின்னர் இராணுவத்தை கொண்டு கிராம மக்களை மிரட்டியமை, இந்த சம்பவங்களுக்கும் அரசியல்வாதிக்கும் தொடர்பு உண்டா? இல்லை அரசியல்வாதியின் பணிப்பின் பேரிலா கிராம அலுவலர் இதை செய்தார்? என்று கேள்வி எழுகின்றது)

இதனையடுத்தே ஊடகவியலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரெலோ கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் ஜனகனின் கைத்தொலைபேசியிலிருந்தே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது,

இன்று (06) திங்கள் கிழமை மதியம் 1.03 மணியளவில் ஸ்ரீரெலோ கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் ஜனகனின் கைத்தொலைபேசியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அதற்கு நான் பதில் அளித்த போது, ”உதயண்ண உங்களுடன் கதைக்கப் போறாராம்” எனக் கூறப்பட்டது. நானும் ஆம் கொடுங்கள் என்றேன்.

அப்போது கற்பகபுரம் தொடர்பான செய்தியை ஏன் அவ்வாறு வெளியிட்டாய்? கிராம அலுவலருடன் கதைத்தீர்களா? ‘இப்படியே வெளியிட்டால் ஆளே இல்லாமல் போகவேண்டி வரும்.’ நாங்க மறுப்புத் தந்தால் போடுவீங்களா? எனக்கூறி அச்சுறுத்தல் விடப்பட்டது எனத்தெரிவித்தார்.

சிறீலங்காவில் ஊடகப்பணியை செய்யும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். வெளிப்படையான இந்த கொலை அச்சுறுத்தல்களுக்கு ஊடக நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் வன்மையாக கண்டித்து குரல் எழுப்ப வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்

Exit mobile version