Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வவுனியா அகதிமுகாம் ஊழல், மோசடியில் அமைச்சர், உறவினர்களுக்கு தொடர்பு:ரவூப் ஹக்கீம்

வவுனியா அகதிமுகாம்களில் இடம்பெறும் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டங்களில் அமைச்சரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வவுனியா அகதி முகாம் மக்களின் அவல நிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய ஹக்கீம் மேலும் கூறியதாவது;

வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களில் இடம்பெறும் பணிகளில் ஊழல் மோசடிகள் நடக்கின்றன. நிர்மாணப்பணிகளுக்கு பொருட்களை அனுப்பும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் உறவினர்களுடையதாகவுள்ளன. அகதிமுகாம்களில் இடம் பெறும் பணிகளுக்கு பொறுப்பாக இருப்பவர் அமைச்சரின் சகோதரர் ஆவார். எனவே அகதிமுகாம் பணிகளில் அமைச்சரும் அவரது சகோதரரும் உறவினர்களும் ஊழல் மோடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகளில் இவர்கள் ஈடுபடும் போது எப்படி ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லையென்று கூற முடியும்? எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.

அகதிகள் மீள் குடியேற்றம் என்பது 180 நாட்களுக்குள் இடம் பெறாது என்றே தெரிகிறது. வன்னி முழுவதும் கண்ணி வெடி, மிதி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறியது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகவே காணப்படுகின்றது.

முசலி பிரதேசம் மீட்கப்பட்டு 2 வருடங்கள் கடந்துவிட்டபோதும் அங்கு இன்னும் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை. இங்கு மீள்குடியேற்றம் செய்ய ஏன் காலதாமதமாகின்றதென்பது புரியாத புதிராகவேயுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான சர்வதேச நிதியுதவிகள் குறைவடைந்து வருகின்றன. மீள் குடியேற்றத் தேவைகள் இருக்கும் போது சர்வதேசத்தின் நிதியுதவி குறைந்து வருவது ஏன் என்று புரியவில்லை. மக்களை மீள்குடியேற்ற மிதிவெடியகற்றும் வரை காத்திருக்கத் தேவையில்லை. எமக்குள் ஒரு கூட்டுறவு ஏற்பட வேண்டும்.

Exit mobile version