வவுனியா வாழ் மக்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் அனைத்து தமிழ்க்கட்சிகளின் பிரதி நிதிகள் ,மனோ கணேசன் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன..
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மூன்று கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக்களை மாற்றி வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதன் மூலம் அம் மாவட்டத்திலுள்ள இன விகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும், அமைதி இன்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும்..
2. வடகிழக்கு மாகாணங்களில் போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும், சொத்துக்களையும் இழந்துநிற்கும் நிலையில் காணிப்பதிவு என்னும் போர்வையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட மோசடியான நில அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்தவும்..
3. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ்பேசும் (அரச ஊழியர்கள் உட்பட) சிறுபான்மை இன மக்கள், காணி, வீடு இன்றி நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரது குடியேற்றத்திட்டம் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்துவதன் ஊடாக ஏற்படும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும்.
உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதற்கு மக்கள் பல பாகங்களிலிருந்தும் தன்னிச்சையாக வந்த போதிலும் அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் காணப்பட்டது.
உண்ணாவிரதத்தில் அரச துணைக்குழுக்களாக நேரடியாகச் செயற்படும் கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் கலந்துகொண்டன.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வலிந்த பௌத்த மயமாக்கல் போன்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை பேரினவாத அரசுகள் கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகின்றன. இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களோடு இராணுவமயமாக்கலையும் மேற்கொள்ளும் ராஜபக்ச கிரிமினல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்வதையே மக்கள் விரும்புகின்றனர். பேரம் பேசும் தமிழ்க் கட்சிகள் தமது பதவி வேட்டைக்காகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் இவ்வாறான மக்களின் உணர்வு சார்ந்த போராட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் காணப்படுவதால் மக்கள் மத்தியில்ருந்து புதிய போராட்ட சக்திகளின் வரவை எதிர்பார்க்கின்றனர்.