07.12.2008.
வலது குறைந்தோரின் நலன்களை பேணக்கூடியதாக மாடிக்கட்டிடங்களை நிர்மாணிக்கக் கூடாதா?
கவலையுடன் கேள்வி எழுப்பும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
“கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு புதிய மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ஒரு மாநாடு. அதில் கலந்து கொள்வதற்காக மாடிப்படி மூலம் ஏறி மூன்றாவது மாடியை அடைந்தேன். மாடிக் கட்டிடங்களை நிர்மாணிக்கும் போது அவற்றை வலது குறைந்தோரின் நலன்களை பேணக் கூடியதாக (Disabled friendly) அமைத்திருக்கக் கூடாதா?’ இவ்வாறு கவலை தெரிவித்தார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர் டாக்டர் கனகராஜா நந்தகுமாரன். இரண்டு வயதிலே போலியோ இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்டவர். இப்போது (இகீக்கூஇஏ) நடக்கப் பயன்படுத்தும் கவையுள்ள ஊன்றுகோல் மூலம் நடக்கின்றார். நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச விசேட தேவையுடையோர் தின நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொள்ள ஊன்றுகோலின் உதவியுடன் டாக்டர் நந்தகுமாரன் வந்தார். மேடையில் ஏறிப்பேச முடியாததால், கீழே கதிரையில் அமர்ந்தபடி அவர் உரையாற்றினார். அவர் சொன்னதாவது; வலது குறைந்தவர்கள் ஏனையோருடன் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அச்சட்டம் எழுத்து அளவில் தான் உண்டு. நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. விசேட தேவையுள்ளோர் வீட்டுக்குள் முடக்கி வைக்கப்படாமல் வெளியே கொண்டு வரப்பட வேண்டும். அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைவது அப்போதுதான் சாத்தியப்படும். முன்னர் விசேட தேவையுடையோரைப் பார்த்து பரிதாபம், பச்சதாபம் அடைந்தனர். இன்று அவர்களுக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை, சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
“உண்மையில் உடல் அசைவு (MOBILITY) என்பது எந்த நேரமும் பாதிக்கப்படக் கூடியது. உடல் அசைவு எந்தநேரமும் எவரிடமிருந்தும் இன, மத பேதமின்றி பறிக்கப்படக்கூடியதொன்றாகும். எமது நாட்டிலே தினமும் 180 விபத்துகள் இடம்பெறுகின்றன. விபத்து, யுத்தம் மற்றும் அனர்த்தம் காரணமாக 100க்கு 20 பேர் அங்கவீனர், வலது குறைந்தோர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். அங்கவீனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இவர்களையும் கருத்திற்கொண்டு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படவேண்டும். கட்டிட நிர்மாணத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த எண்ணம் ஏற்படுத்த வேண்டும். கொழும்பில் சுகாதார அமைச்சு நிறுவிய 3 மாடிக் கட்டிடத்தில் இந்த எண்ணம் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. சமுதாயம் தானாகக் கட்டி எழுப்பிய தடைகளை உடைத்தெறிய வேண்டும். இது சமுதாயத்தின் கடமையாகும்.
வலுவிழந்தவர்கள், வலது குறைந்தவர்களும் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். சிறார்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களுக்கு உரியதை சமுதாயம் வழங்க வேண்டும். சிறாரின் மனம் கண்ணாடி போன்றது. பாதிக்காதபடி சிறாரைப் பாதுகாக்க வேண்டும்’ என்றும் பணிப்பாளர் டாக்டர் நந்தகுமாரன் கூறினார்.