தச்சு தொழிலாளராக ரவிசங்கரின் வருமானம், குடும்பத்தை நடத்தி செல்ல போதுமானதாக இருக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் கடும் வறுமையில் வாடினர்.
இந்த நிலையில் இன்று காலையில் ரவிசங்கரின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த அப்பகுதியினர், வீட்டு கதவை தட்டினர். ஆனால் யாரும் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது ரவிசங்கரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அனைவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் ரவிசங்கரின் மனைவி மாரியம்மாள், பிள்ளைகள் மகாலட்சுமி, மகாராஜன், மகாதேவன், மலர்வனம் ஆகிய 5 பேரும் இறந்திருந்தனர்.
ரவிசங்கரும், அவரது மகன் மணிகண்டனும் மட்டுமே மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இருவரையும் மீட்ட போலீசார், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில் ரவிசங்கர் குடும்பத்துடன் சயனைடு தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவின் இன்னொரு பகுதி வல்லரசுக்கனவில் மிதந்துகொண்டிருக்க மற்றொருபகுதி இழப்பதற்கு மரணத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பல்தேசிய வியாபாரிகளுக்கு மட்டுமே இன்றைய மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் அடியாளாகச் செயற்படும் நிலையில் மக்கள் அனாதரவாக அடிமைகளாக தெருக்களில் மரணிக்கின்றனர்.