மெல்போர்ண் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியர் ரோப் மூடியின் தலைமையில் ஆய்வுகளை மேற்கொண்ட பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் குழு மேற்குறித்த முடிவிற்கு வந்துள்ளது.
வறிய மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைக்கும் பல்தேசிய நிறுவனங்கள், சட்டவரைமுறைகள் அற்ற இந்த நாடுகளில் அதிக அளவிலான தொற்று நோய்களைப் பரப்பும் வாய்ப்புக்கள் காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. உலக சுகாதாரம் என்ற அடிப்படையில் வறிய நாடுகளில் இந்த நிறுவனங்களின் வணிகம் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் இக் குழு தெரிவித்துள்ளது.
இருதய நோய், பக்கவாதம், நீரிழிவு, புற்று நோய் போன்றவையே மூன்றாம் உலக நாடுகளின் நீண்டகால சிக்கல்களாக காணப்படும் நிலையில் பல்தேசிய நிறுவனங்களின் சுதந்திரமான வருகை பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது என இந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை எச்சரிக்கின்றது. 2010 ஆம் ஆண்டில் 3.5 மில்லியன் நோயாளிகள் உலகம் முழுவதும் இவ்வாறான நோய்களால் மரணமடைந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
மேற்கு நாடுகளில் இவ்வாறான குடிபானங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான சந்தைப் போட்டி நிரப்பப்பட்டுவிட்டதால் இந்த நிறுவனங்கள் வறிய மூன்றாம் உலக நாடுகளைத் தேடிச் செல்கின்றன என்று குழுவின் அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
உயர்கல்விக்கு சில்லரை வணிக பல்தேசிய நிறுவனங்களால் வழங்கப்படும் உதவித் தொகை மாணவர்களை அந்த நிறுவனங்களுக்குச் சார்பானவர்களாக மாற்றுகிறது என்று மேலும் ஆய்வு குறிப்பிட்டது.
சமூக வலைத் தளங்கள், சிறுவர்களுக்கான நலத் திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியும் அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கி சுகாதார சேவைத் துறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் ஊடாகவும் இளம் சமுதாயத்தை தமக்கு ஆதரவாக இந்த நிறுவனங்கள் மாற்றிக் கொள்கின்றன என்று மூடி குழுவினர் தெரிவிக்கின்றனர்.
தேசிய மற்றும் சர்வதேசிய கொள்கைத்திட்டங்களை நாடுகள் வகுத்துக்கொள்ளும் போது செல்வாக்குச் செலுத்தும் இந்த நிறுவனங்கள் தமது வியாபாரத்திற்கு ஏற்றவாறு அரசியலை மாற்றுகின்றன. இச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மூடி குழு மேலும் தெரிவித்தது.
மூன்றாம் உலக நாடுகளை ஆக்கிரமித்துவரும் இந்த இறுவனங்களின் பின்னால் அரசுகள் செயற்படுகின்றன. இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கிய ஒரு சில மாதங்களின் உள்ளாகவே இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.