இவ்வாறு புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில், சுமார் 14 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10000 இரண்டு கட்டங்களில் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது அவர்களது வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பிற்கு ஓரளவு உதவக்கூடியதாகும.; அதேவேளை நாட்டின் சுமார் 70இலட்சம் தனியார்துறைத் தொழிலாளர்கள் ஊழியர்களுக்கு திட்டவட்டமான சம்பள உயர்வு போதுமானதாக அறிவிக்கப்படவில்லை. சிறுதொகையான ரூபா 2500 மட்டுமே பெயரளவில் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. இது அவர்களைத் திட்டமிட்டுக் கைவிட்டுள்ள மோசாமான செயலாகும். இதன்மூலம் பல்தேசியக் கம்பனிகள், பெருவணிக நிறுவனங்கள், தனியார் கம்பனிகள்- நிறுவனங்களின் அப்பட்டமான சுரண்டலுக்கு மைத்திரி-ரணில் அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி நிற்பதையே எடுத்துக்காட்டுகிறது. அது மட்டுமன்றி சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட உணவுப் பொருட்களான கோதுமை மா ,சீனி, பருப்பு, மல்லி, நெத்தலி, போன்றவற்றிற்கான விலைக்குறைப்பு என்பது ஒருவகை ஏமாற்றேயாகும். அதேபோன்று நெல்லுக்கு உத்தரவாத விலையைக் கூட்டியுள்ள வரவு செலவுத்திட்டம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவில்லை. எனவே கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும், மேல் நடுத்தர வர்க்கத்தினருக்கும் விலைக் குறைப்புக்கள், சம்பள உயர்வு என்பன ஆறுதல் வழங்கியுள்ள அளவிற்கு ஏகப் பெரும்பாண்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கைச்செலவின் சுமைக்குப் போதிய பரிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. குறிப்பாகப் பெரும் தோட்டத்துறையிலும், சுதந்திர வர்த்தக வலயங்களிலும், ஏனைய தனியார் நிறுவனங்களிலும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்களை இவ் வரவு செலவுத்திட்டம் உதாசீனம் செய்துள்ளது. இது தரகு முதலாளித்துவ மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் தொழிலாளி வர்க்க விரோத மக்கள் விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே காணப்படுகிறது. எனவே ஆட்சி மாற்றத்தால் அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பிலும் சுரண்டல் போக்கிலும் மாற்றம் ஏற்பட மாட்டாது என்பதற்கு இவ் வரவு செலவுத் திட்டம் நல்லதோர் எடுத்துக்காட்டாகும். ஆதலால் தொழிலாளர்கள், ஊழியர்கள், மற்றும் உழைக்கும் மக்கள் தமக்கானவற்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தமது கோரிக்கைகளை முன்வைத்து இன மத மொழி பிரதேச வேறுபாடின்றி உழைக்கும் வர்க்கம் எனும் அடிப்படையில் ஒன்றினைந்து போராடுவதற்கு முன்வருவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதையே எமதுகட்சி வற்புறுத்தி நிற்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்.