Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வரலாற்றின் மறு சுழற்சி – விதேசிய தமிழரசுக் கட்சியின் 15 வது தேசிய மாநாடு

fpதமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்து பாரளுமன்ற அரசியலுக்குள் நுளைந்த இலங்கை தமிழரசுக் கட்சி தனது 15 வது தேசிய மாநாட்டை 07/05/2014 அன்று நடத்துகிறது. இதற்கான கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் கூடியது. தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பமானது. இலங்கையின் தீவிர வலதுசாரிக் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாகும். 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் ஆங்கிலப் பெயர் சமத்துவக் கட்சியாகும் -Federal Party. தேர்தலில் போட்டியிடும் போது Federal Party என்ற பெயரையே இக்கட்சி பயன்படுத்தியது.

இலங்கையின் பிரபல வழக்குரைஞரான ஜீ,ஜீ,பொன்னம்பலத்தின் இலங்கை தமிழக் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிளவுற்ற சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்பவரால் தமிழரசுக் கட்சி தொடக்கப்பட்டது. மலேசியாவில் பிறந்த செல்வநாயகம் தந்தை செல்வா என்று அழைக்கப்பட்டார். மலேசியாவிலிருந்து இலங்கை திரும்பிய செல்வநாயகம் குடும்பத்தினர் ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் வாழ்ந்தனர்.

கொழும்பில் உயர்குலத்தவரின் பாடசாலைகளில் ஒன்றான சென்.தோமஸ் கல்லூரியில் கல்விகற்ற செல்வநாயகத்திற்கு இலங்கையின் பிரதமராகவிருந்த சொலமன் டயஸ் பண்டாரநாயக்க பள்ளித் தோழர்.
1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது.

விடுதலைப் புலிகள் உட்பட்ட ஆயுதக் குழுக்களை தனது இராணுவ அமைப்பாகக் கருதிய தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும், தனது தேர்தல் எதிரிகளைக் கொலை செய்வதற்கும் மிரட்டுவதற்கும் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டன.

ஒரு பக்கத்தில் இலங்கையின் தீவிர வலதுசாரி மக்கள் விரோத சிங்கள அரசியல் வாதிகளுடனும் கட்சிகளுடனு, உறவுகளைப் பேணிக்கொண்ட தமிழரசுக் கட்சி மறுபக்கத்தில் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களால் மக்களிடமிருந்து வாக்குக்களை அபகரித்துக்கொண்டது.

இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் ஒடுக்குமுறையாளர்களுடன் உறவைப் பேணிய தமிழரசுக் கட்சியின் கைகளில் விழுந்தது. தமிழரசுக் கட்சியின் அரசியல் தொடர்ச்சியாகத் தோன்றிய தேசிய விடுதலை இயக்கங்கள் புரட்சிகரப் போராட்ட இயக்கங்களாக இல்லாமல் ஆயுதம் தாங்கிய தமிழரசுக் கட்சியாக மாற்றமடைந்தன.

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தொடர்பான தெளிவான அரசியலை இடதுசாரிகள் முன்வைக்கத் தவறியமையால் வலதுசாரி ஏகாதிபத்திய ஆதரவாளர்களான

தமிழரசுக் கட்சி அதனைக் கையகப்படுத்தி தனது வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக்கொண்டது.
இறுதியில் ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் அரசியல் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துள்ளும் ஏகாதிபத்தியங்களின் பிடிக்குள்ளும் விழுந்தது.

தமிழரசுக் கட்சி 1976 ஆம் ஆண்டில் தேர்தலுக்கு ஒரு வருடங்கள் முன்னதாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டையில் இத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்காக முன்வைக்கப்பட்ட இத் தீர்மானம் இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தொடர்பான தேசிய அரசியலை முன்வைக்கவில்லை. வெற்று முழக்கங்களாகமுன்வைக்கப்பட்ட தீர்மானங்களை தமிழரசுக் கட்சி கைவிட்டுள்ள அதே வேளை புலம்பெயர் அமைப்புக்கள் தமது அரசியலாக முன்வைக்கின்றன.

பிரிந்து செல்வதற்கான உரிமைக்கான தீர்மானமாக அன்றி தாயகக் கோட்பாடாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் 1977 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்தலில் வாக்குகளைக் கைப்பற்றுவதே.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி அதிக வாக்குகளை வென்று இலங்கையின் எதிர்க்கட்சியானது. தமிழரசுக் கட்சியின் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

பின்னதாக 2001 ஆம் ஆண்டு புலிகளின் நாடாளுமன்றப் பிரச்சாரப் பிரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2001 அக்டோபர் 20 இல் நான்கு கட்சிகள் இணைந்து இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் – சுரேஷ் அணி), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய நான்கு கட்சிகள் இணைந்திருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட்டனர். 2001 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது. 2013 ஆம் ஆண்டில் வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன.

அன்னிய நாடுகளின் நலன்களின் சார்பாக தனது வரலாறு முழுவதும் செயற்படும் தமிழரசுக் கட்சி தன்னை எப்போதும் அதிகாரவர்க்கங்களுடனேயே அடையாளப்படுத்தி வந்தது. வன்னியில் ஓடிய இரத்த ஆற்றின் ஊற்றுமூலம் தமிழரசுக் கட்சியின் பிற்போக்கு தேசியத்திலிருந்து ஆரம்பமானது. தமது இந்திய மற்றும் ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசியலை இன்று வரை தமிழரசுக் கட்சி கைவிட்டதில்லை.
இப்போது தனது 15 வது தேசிய மாநாட்டை தமிழரசுக் கட்சி நடத்துகிறது. வரலாற்றி மறு சுழற்சி இன்னொரு திசையில் அதே முகங்களுடன் தொடர்கிறது.

-மனோ

Exit mobile version