Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வரதராஜப் பெருமாள் பொலிஸ் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் காரணமாகவே மீளப் பெறப்பட்டது: மாநாட்டில் பேர்ட்டி பிரேமலால்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதிலும் வடக்கு கிழக்க மாகாண முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் காரணமாகவே அந் நேரம் பதவியலிருந்த ஜனாதிபதியினால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டதாக வட மேல் மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்கா இன்று மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டின் பின்னரான செய்தியாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி காணி அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அவற்றை நடை முறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

ஜனாதிபதியைப் பொறுத்த வரை சகல அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளார்.விரைவில் வடக்கிற்கும் மாகாண சபைத் தேர்தல் நடை பெறவிருக்கின்றது.அந்த தேர்தல் நடந்து முடிந்த பின்பு 13ஆ வது அரசியல் யாப்பு திருத்தம் முற்றாக அமுலுக்கு வரும் ” என்றும் தனது பதிலில் குறிப்பிட்ட அவரிடம்,

ஏனைய மாகாணங்களில் நடைமுறையில் இல்லாத வகையில் கிழக்கு மாகாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்களில் ஒருவராக ஆளுனர் செயலாற்றிவருவது குறித்து கேட்ட போது,

“ஏனைய மாகாணங்களில் இந்த பிரச்சினை இல்லை .மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக முதலமைச்சர்களும் அமைச்சரவை அமைச்சர்களுமே நியமிக்கப்படுகின்றார்கள்.ஏற்கனவே மாகாண சபை இயங்காத காரணத்தினால் கிழக்கு மாகாணத்தில் ஆளுனர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கலாம் .அந் நியமனம் தொடர்பான உத்தரவு இது வரை இரத்து செய்யப்படமையே இதற்கான காரணமாக இருக்கலாம் .எனினும் இப்படியான பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வைக் காண முடியும் ” என பதிலளித்தார் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க.

இம் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதலமைச்சர்கள் அமைப்பின்தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,

” இந்த மாநாட்டில் கடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டது.இன்றைய மாநாட்டில் 48 பிரேரணைகள் முன் வைக்கப்பட்டு ஆராயப்பட்டது.இதில் கணிசமான விடயங்கள் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் ஆகும்.

வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அமுல்ப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றி ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளைக் காண்பது பற்றியும் ஆராயப்பட்டது” என்றார்.

2009 – 20010 ஆண்டு முதலமைச்சர்கள் மகாநாட்டின் தலைவராக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்கா தெரிவானார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் அனுராதபுரத்தில் இம் மாநாடு நடைபெறும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

Exit mobile version