23.09.2008.
இலங்கையில் உள்நாட்டில் மோதல்களினால் நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான அகதிகளிற்கு நிரந்தர தீர்வொன்றினைக் காணும் நோக்கில் மனித உரிமைகள், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களுடன் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள மூன்று-நாள் கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.
அகதிகளுகான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட பிரதிநிதி பேராசிரியல் வால்டர் கலின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும், உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய பேராசிரியர் வால்டர் கலின் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைசூழ்நிலைக்கும் மத்தியிலும், குறிப்பாக வடக்கில் ஏற்பட்டுள்ள இடர்களிற்கு மத்தியிலும் இவ்வாறானதொரு கலந்துரையாடலினை நடாத்துவது வரவேற்கத்தக்கது என்றும், வன்முறைகளிற்கும், இடப்பெயர்வுகளிற்கும் முகம்கொடுத்துள்ள மக்களின் துன்பங்களையும், தேவைகளையும் மறந்துவிடமுடியாது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வொன்றினைக்காண்பதற்கு தகுந்த திட்டமிடலொன்றினை முன்னகர்த்துவது என்பது ஒரு சவால் என்றும் அந்தச் சவாலிற்கு இப்போதே முகம்கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.