Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னி நிலைமைகளை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் தேவையில்லை:மகிந்த

“உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? இதனை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் எதற்காக? உலகம் முழுவதற்குமே அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது தெரியும்.

ஆனால், இதில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அனைத்துலக இராஜதந்திரிகள் பலர் இவை எதனையும் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக இருப்பது அனைத்துலக அனர்த்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்வதாக அமையும் என்பதையிட்டு உலகத்துக்கு நான் எச்சரிக்க விரும்புகின்றேன்.

இலங்கையின் தென்பகுதியில் உள்ள எம்பிலிப்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தமெதிலும் ஈடுபடப்போவதில்லையென்று இன்று மீண்டுமொருமுறை மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு வெளிநாட்டினரை விட தமக்கும் தனது அரசுக்கும் அதிகமாகவே இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளவும் இல்லை என்றும் தற்போது யுத்த நிறுத்தத்துக்கு செல்லவும் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பாமல், நடுநிலையாக நின்று களநிலைமைகளை ஆராய்வது அனைவரது கடமையுமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்ணர் ஆகியோரின் ஒரு நாள் இலங்கை விஜயத்தின் பிறகு மஹிந்த அவர்களின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version