சாதிவெறி கும்பலிடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்க துப்பற்ற, வக்கற்ற அரசு சில பத்து நாட்களுக்குள்ளாகவே சாதிவெறியர்களின் பிரச்சாரத்திற்கு அனுமதியளித்திருக்கிறது. ஆனால் இந்த தாக்குதலை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய பெண்ணாகரம் பகுதி தோழர் நாகராஜை கைது
28.11.12 புதன்கிழமை காலை தருமபுரியில் ’விவசாயிகள் விடுதலை முன்னணி’ தோழர்கள் பா.ம.க வின் சாதி வெறியாட்டத்தை கண்டித்து ராஜகோபால் பூங்கா அருகே பிரம்மாண்டமான பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்ட நாளன்று தருமபுரி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் சிறிது சிறிதாக சுமார் ஐநூறுக்கும் அதிகமானவர்கள் வந்து குவிந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசு கும்பல் அதிர்ச்சியடைந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆர்ப்பாட்டத்தை நடத்தக்கூடாது என்றனர்.
சாதிவெறியை கண்டிக்கும் முழக்க அட்டைகள், பதாகைகள், செங்கொடிகள், செஞ்சட்டை அணிந்த தோழர்கள், குழந்தைகள், நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராம மக்களும் இன்ன பிற கிராம மக்களும் அணி திரண்டு சாதிவெறியர்களை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.
தொடர் முழக்கத்தை அடுத்து வி.வி.மு வட்டாரச் செயலாளர் கோபிநாத் கண்டன உரையாற்றினார். எங்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்ற காவல்துறை கடந்த ஏழாம் தேதி ஐந்து மணி நேரமாக தாக்குதல் நடந்த போது எங்கே போனது என்று கேட்டார்.
அடுத்து பேசிய ம.உ.பா.மை தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஜானகிராமன் பேசும் போது தாசில்தார் ஆபீசில் போய் நாங்கள் எல்லாம் வன்னியர்கள் என்றால் லஞ்சம் வாங்காமல் சான்றிதழ் கொடுத்துவிடுவாரா, அதே போல உங்கள் சாதியை சேர்ந்த வன்னிய கந்துவட்டிக்காரனிடமே போய் மீட்டர் வட்டியை குறைக்கச்சொன்னால் குறைப்பானா ? இது போல பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டி உழைக்கும் மக்கள் உழைக்கும் மக்கள் தான் அவர்கள் ஒன்றுமில்லாத ஓட்டாண்டிகள் தான். அவர்களுக்கு எதற்கு சாதி என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த தாக்குதல் தடுத்து நிறுத்தப்படாத்தற்கு காரணம் போலீசு, நீதி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் என்று மொத்த அரசுமே தனி ஒரு அதிகார வர்க்க சாதியாக இருக்கிறது என்றார்.
அடுத்ததாக பேசிய தோழர் ஆம்பள்ளி.முனிராஜ் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றியுள்ளாரா, இல்லை. சாதிவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தி வைத்து அதில் ஆதாயம் காண்பது தான் இவர்களின் நோக்கம். இத்தகைய சாதிவெறி கட்சிகளோடு திருமாவளவன் கூட்டனி வைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவதையும் கண்டித்தார். தலித் மக்களின் விடுதலை தலித் அமைப்புகளில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கண்டன உரைகளுக்கு பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டம் துவங்கியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் போலீசு எச்சரித்ததையும் மீறி இரண்டு மணி நேரமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுற்றி நின்று நூற்றுக்கணக்கான மக்கள் கவனித்தனர்.
இந்த சாதிவெறி தாக்குதலை கண்டித்து சி.பி.ஐ, சி.பி.எம் இருவரும் பேருக்கு ஒரு பேரணி ஆர்ப்பாட்டம், விசி. ஆர்ப்பாட்டம், சில மா.லெ அமைப்புகள் தவிர வேறு எந்த ஓட்டுக்கட்சிகளும், தமிழ்தேசிய அமைப்புகளும் ஒரு சுவரொட்டியை கூட ஒட்டவில்லை. இவ்வளவு பிரச்சினைக்கிடையிலும் நாம் தமிழர் கட்சி 27-ம் தேதி தருமபுரி நகரில் மாவீரர் தின அரங்க கூட்டத்தை நடத்தியுள்ளது.
மேற்கண்ட அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பொதுவாக தாக்குதல், சாதிவெறி என்று தான் சுவரொட்டிகளிலும், பிரசுரத்திலும், முழக்கத்திலும் குறிப்பிட்டுள்ளனர். இது அவர்களுடைய அணிகள் மத்தியிலும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு சிலர் மாற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வி.வி.மு மிகச்சரியாக வன்னிய சாதிவெறி என்று சாடியது. இதை நத்தம், அண்ணா நகர் பகுதி மக்களே நீங்கள் தான் சரியாக சொல்கிறீர்கள் என்று கூறினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாவட்ட எஸ்.பி. இனிமேல் யாரும் சாதி கட்சி பெயரை குறிப்பிட்டு பேசவோ, பிரசுரம் கொடுக்கவோ, போஸ்டர் ஒட்டவோ கூடாது என்று ஒரு உத்தரவிட்டிருக்கிறார். தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள்ளேயே சாதிவெறியர்கள் மீண்டும் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியளிக்கும் அரசு அந்த சாதிவெறியை எதிர்ப்பதற்கு அனுமதி மறுக்கிறது.
இந்த அரசு எந்திரத்திற்குள் தான் தேர்தல் பாதையில் சென்று ஓட்டுப்பொறுக்கி அதிகாரத்தை கைப்பற்றிவிடலாம் என்று சிலர் தலித் மக்களை நம்பச் சொல்கிறார்கள். உழைக்கும் மக்களின் பாதை நக்சல்பாரி புரட்சி பாதையா அல்லது திருடர்கள், பிழைப்புவாதிகளின் தேர்தல் பாதையா என்பதை உழைக்கும் மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.